30% சூரிய சக்தி, பெண் ஓட்டுநர்கள்: புனே பெருவிரைவு ரயிலின் இளஞ்சிவப்பு வழித்தடம் திறப்பு

30% சூரிய சக்தி, பெண் ஓட்டுநர்கள்: புனே பெருவிரைவு ரயிலின் இளஞ்சிவப்பு வழித்தடம் திறப்பு

படம்: இபிஎஸ்

04 Nov 2026 - 2:43 pm

2 mins read

புனே: இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சி, நவீனப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 8,300 கோடி ரூபாய் ($1.123 மில்லியன்) செலவில் கட்டப்பட்ட பெருவிரைவு ரயில் மூன்றாவது வழித்தடத்தைப் (இளஞ்சிவப்பு வழித்தடம்) பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.

ஹின்ஜேவாடி தகவல் தொழில்நுட்ப நிலையத்தையும் மாவட்ட நீதிமன்ற பெருவிரைவு ரயில் நிலையத்தையும் 23 கிலோமீட்டர் தொலைவிலான அந்த வழித்தடம் இணைக்கும்.

பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்பப் பணியாளர்களின் பயண நேரத்தைச் சேமிக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளஞ்சிவப்பு வழித்தடச் சிறப்பம்சங்கள்

அவ்வழித்தட ரயில்கள் முழுமையாகப் பெண் ஓட்டுநர்களால் இயக்கப்பட உள்ளன. ரயில் இயக்கத்திற்கான மின்சாரத் தேவையில் 30 விழுக்காடு சூரிய சக்தி மூலம் பெறப்படும்.

மேலும், நான்கு வழித்தடங்களை உள்ளடக்கிய 13,500 கோடி ரூபாய் ($1.823 மில்லியன்) மதிப்பிலான புனேப் பெருவிரைவு இரண்டாம் கட்டப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மகாராஷ்டிராவில் மட்டும் உள்கட்டமைப்பில் இதுவரை 2.5 லட்சம் கோடி ரூபாய் ( $33.8 பில்லியன்) முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தொடக்கவிழா நிகழ்ச்சியில் உரையாற்றியபோது பிரதமர் குறிப்பிட்டார்.

உள்கட்டமைப்பே பொருளியல் வளர்ச்சியின் தூண்

மேலும், வளர்ந்த நாட்டிற்கான தொலைநோக்குப் பார்வையின் மையக்கருவாக நகர்ப்புற உள்கட்டமைப்பு திகழ்வதாக அவர் கூறினார்.

“2014ஆம் ஆண்டில் ஐந்து நகரங்களில் 248 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டுமே இருந்த இந்தியாவின் பெருவிரைவு ரயில் சேவை, தற்போது 26 நகரங்களில் 1,200 கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் பெருவிரைவு ரயில் கட்டமைப்பில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருவிரைவு ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர்,” என அவர் தெரிவித்தார்.

பொருளியல் வளர்ச்சியும் சமூக மேம்பாடும்

உள்கட்டமைப்பு, மக்கள் நலத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, உலக வங்கியின் அண்மைய அறிக்கையை மேற்கோள்காட்டிப் பேசினார்.

இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் ஏறத்தாழ 50 கோடி (0.5 பில்லியன்) மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும் வறுமைக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தற்போது வெற்றிகண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் துணைநிற்பது அரசின் பொறுப்பு என்றும் அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்