10,000 போராட்டக்காரர்களுக்கு 3,000 காவலர்கள்: புதுடெல்லி காவல்துறை

10,000 போராட்டக்காரர்களுக்கு 3,000 காவலர்கள்: புதுடெல்லி காவல்துறை

2 mins read
d0525f75-43fa-4d3e-9325-3f5c5bd95c13
சனிக்கிழமையன்று மாணவர்களின் போராட்டத்தின்போது சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க டெல்லி காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: புதுடெல்லியில் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள பகுதியில் ஏறக்குறைய 10,000 பேர் கூடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருந்தாலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க கிட்டத்தட்ட 3,000 காவலர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.

இந்தக் கிளர்ச்சியில் இதுவரை 130 காவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் 15 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், போராட்டங்களின்போது ஏறக்குறைய 65 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் அது கூறியது.

ஜந்தர் மந்தருக்கு வரும் ‘சமூக விரோதிகளை' அடையாளம் காண கண்காணிப்புக் கேமராக்ளைப் பயன்படுத்தி முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பத்தை டெல்லி காவல்துறை பயன்படுத்தி வருகிறது.

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த குற்றப்பின்னணிகளைக் கொண்ட 2,000க்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெல்லி காவல்துறை முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.

குடியரசு தினம், சுதந்திர தினம், ஹோலி, தீபாவளி, ஈகைப் பெருநாள், ராம்லீலா கொண்டாட்டங்கள், நகரத்தின் பிற முக்கியப் பொது நிகழ்வுகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தத் தொழில்நுட்பத்தை டெல்லி காவல்துறை பயன்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜீத் திப்கே, சனிக்கிழமையன்று தனக்கு டைஃபாய்ட் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டங்கள் எந்தத் தடங்கலும் இன்றித் தொடரும் என்று அவர் உறுதியளித்தார்.

சோனம் வாங்சுக், தனது 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டதையும் அவர் வரவேற்றார்.

“தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நமது ஆர்ப்பாட்டம் தொடரும். எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடுநிலையான இடத்தில்தான் நடைபெற வேண்டும். தர்மேந்திர பிரதானின் பதவி விலகலைத் தவிர வேறு எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி வியாழக்கிழமை மாலை இன்ஸ்டகிராமில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அடுத்த 11 மணி நேரத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு மற்றொரு காணொளியையும் அவர் பதிவிட்டார்.

அதில், தனது முந்தைய காணொளியைப் பார்த்து ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்ட இளையர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

“நண்பர்களுக்கு நன்றி. நள்ளிரவில் உங்களுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனது காணொளிக்கு நீங்கள் பதிலளித்த விதத்திற்கும், நீங்கள் வழங்கிய நேர்மறையான ஆலோசனைகளுக்கும் நன்றி. உங்கள் அன்பு தொடர்ந்து கிடைக்கும். நமது பிணைப்பு மேலும் வலுப்பெறும். நன்றி, நண்பர்களுக்கு நன்றி,” என்று அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கம் மூலம் வெளியிட்ட 2வது காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டகிராமில் அதிகபட்சமாக 102 மில்லியன் பேர் பிரதமர் மோடியை பின்தொடர்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்