புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பப்படும் பணத்தை, இந்தியத் தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGOs), அறக்கட்டளைகள் எவ்வாறு பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதை எப்.சி.ஆர்.ஏ., சட்டம் நிர்வகிக்கிறது. இந்தச் சட்டத்தைக் கடுமையாக்கும் வகையில் சட்டத் திருத்த முன்வரைவை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தச் சட்டத் திருத்த முன்வரைவை ஆய்வு செய்வதற்காக, 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த முன்வரைவுகளை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
எனினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அந்தச் சட்ட முன்வரைவுகளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை.
இதனால் எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த முன்வரைவை ஆய்வு செய்ய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. இப்போது அந்தச் சட்டத்திருத்த முன்வரைவை ஆய்வு செய்வதற்காக, 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
பீகார் மாநிலத்தின் பெட்டியா தொகுதி பாஜக எம்பி சஞ்சய் ஜெயஸ்வால் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார்.
குழுவில் நாடாளுமன்றக் கீழவை, மேலவை இரண்டிலிருந்தும் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். கீழவைச் சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்த இந்தக் குழுவில், கீழவையில் இருந்து 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேலவையில் இருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பாஜகவிலிருந்து 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரசில் இருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.
மேலும் ஜேடி(யு), திரிணாமூல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளிலிருந்து தலா இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சமாஜ்வாதி ஐயுஎம்எல், சிவசேனா, என்சிபி (எஸ்பி), என்சிபி மற்றும் டிடிபி ஆகிய கட்சிகளிலிருந்து தலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் உள்ளனர்.
வெளிநாட்டு நிதிகள் தேச விரோதச் செயல்களுக்கோ மதமாற்றம் போன்ற நோக்கங்களுக்கோ பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவுமே இந்த சட்டத் திருத்த முன்வரைவு கொண்டுவரப்பட்டதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மசோதாவின் உட்பிரிவுகளை விரிவாக ஆராய்ந்து, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்பதற்காக இது 31 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் தனது அறிக்கையை கீழவையில் சமர்ப்பிக்குமாறு அக்குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


