சென்னை: ஈரான் - இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முதல் ஈரான்மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருவதால் அங்கு போர்ச்சூழல் நிலவுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், வாழ்வாதாரத்திற்காக அங்கு சென்றிருந்த தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
மத்திய அரசின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்ட இந்த மீனவர்கள், சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.
மீனவர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய பியூஷ் கோயல், அவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
போர் முனையில் இருந்து உயிருடன் திரும்பிய மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் மத்திய அரசுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

