மும்பை மாநகராட்சித் தேர்தல் வேட்பாளர்களில் 35% பேர் கோடீஸ்வரர்கள்

2 mins read
7fb107ee-2651-44e3-ab4f-349c59799c74
 மகரந்த் நர்வேகர். - படம்: மகாராஷ்டிரா டைம்ஸ்

மும்பை: மும்பை மாநகராட்சித் தேர்தல் களம் களைகட்டி வருகிறது. இம்முறை தேர்தலில் போட்டியிடும் மகரந்த் நர்வேகர் என்பவரின் சொத்து மதிப்பு ரூ.125 கோடி எனத் தெரிய வந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் இவரின் சொத்து மதிப்பு 20 மடங்கு அதிகரித்துள்ளது.

மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆகப்பெரிய பணக்காரர் மகரந்த்தான். இவரது சகோதரர் மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகர் ராகுல் நர்வேகர் என்பது கவனிக்கத்தக்கது.

தனது சொத்துகள் குறித்து தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார் மகரந்த்.

தெற்கு மும்பையில் உள்ள 226வது வார்டில் கடந்த 2017ஆம் ஆண்டு போட்டியிட்டபோது இவரது சொத்து மதிப்பு ரூ.6.30 கோடிதான். ஆனால், தேர்தலில் வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகள் கவுன்சிலராகப் பதவி வகித்த பின்னர் மகரந்த் நர்வேகரின் சொத்து மதிப்பு ரூ.124 கோடியாக அதிகரித்துவிட்டது. இவற்றுள் அசையும் சொத்துகள் ரூ.32 கோடி, அசையா சொத்துகள் ரூ.92 கோடி என்று குறிப்பிட்டுள்ளார் மகரந்த்.

கடற்கரை நகரமான அலிபாக்கில் மட்டும் 27 இடங்களில் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளனர். அதேசமயம் இவருக்கு ரூ.16.68 கோடி கடன் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை 225வது வார்டில் மகரந்த் நர்வேகரின் மைத்துனி ஹர்ஷிதா போட்டியிடுகிறார். அவரது சொத்து மதிப்பும் கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ.10 கோடியில் இருந்து ரூ.63 கோடியாக அதிகரித்துள்ளது.

மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 35 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவர்களில் 133 பேர் 60 வயதைக் கடந்தவர்கள். 24 பேர் 70 வயதைக் கடந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்