மும்பை: உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தீபாவளிக்காக 35 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படவுள்ளன.
இதன் மூலம் தொடர்ந்து 7வது ஆண்டாக உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது.
ஒவ்வொரு தீபாவளி நாளில் ராமர்கோயில் அமைந்துள்ள அயோத்தியில் பிரம்மாண்ட விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அதில் முக்கியமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2017ஆம் ஆண்டில் பாஜக சார்பில் முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டத்தில் அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வரும் தீபாவளி அன்று அயோத்தியில் 35 லட்சம்அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.
இவற்றில், 25 லட்சம் விளக்குகள் சரயு நதிக்கரைகளிலும் மற்றவை அயோத்தியின் இதரப் பகுதிகளிலும் ஒளிவீசத் தயாராகின்றன. இந்த எண்ணிக்கையில் உலகளவில் எந்த இடத்திலும் தீபங்கள் ஏற்றப்பட்டதில்லை.
இந்த நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனையாக மீண்டும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் இதற்கு முன்பு கடந்த 2018ல் 3.01 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
கடந்த 2019ல் 4.04 லட்சம், 2020இல் 6.06 லட்சம், 2021ல் 9.41 லட்சம், 2022ல் 15.76 லட்சம், 2023ல் 22.23 லட்சம் விளக்குகள் ஒளிவீசின. இப்போது 7வது முறையாக தீபாவளி நாளில் உலக சாதனை நிகழ்த்தப்படுகிறது என்று இந்து தமிழ் திசை தகவல் தெரிவிக்கிறது.
உ.பி. சுற்றுலா துறை அதிகாரி ராஜேந்திர பிரசாத், ‘‘சரயு நதிக்கரையில் முதன்முறையாக மகா ஆரத்தியை 1,100 பேர் காட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 28 முதல் 30 வரை அயோத்தியின் பல்வேறு 30 முக்கிய பகுதிகளில் ராமாயணம் தொடர்பான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இதில் உள்ளூரைச் சேர்ந்த சுமார் 250 கலைஞர்களுடன் மலேசியா, மியன்மார், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனீசியா மற்றும் நேப்பாளம் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களும் இடம்பெற உள்ளனர்.