சென்னை: எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா-சீனா இடையே 35வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவத்தில் சுமார் 45 வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது. கல்வான் மோதலால் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் எழுந்தது.
எனினும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு போர் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பியது. அப்போது முதல் இரு தரப்பு இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் புதன்கிழமை 35வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், இந்திய வெளியுறவு இணைச் செயலாளர் சுஜித் கோஷ் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். சீனாவின் தரப்பில் அந்நாட்டு வெளியுறவுத் துறையின் எல்லை விவகார இயக்குநர் ஹுயான்சி தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சீனா உடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்தது. இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளின் தற்போதைய நிலை குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
“எல்லையில் அமைதி, நல்லிணக்கத்தைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருதரப்பிலும் முழு திருப்தி தெரிவிக்கப்பட்டது.
“எல்லை நிர்ணயம், எல்லைப் பகுதி மேலாண்மை, பரஸ்பர ஒருங்கிணைப்பை மேம்படுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. எல்லை விவகாரங்கள் தொடர்பாக இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் தொடர்பில் இருக்க உறுதி மேற்கொள்ளப்பட்டது,” என்று கூறப்பட்டுள்ளது.

