கோல்கத்தா: கோல்கத்தாவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற 39 பள்ளி பிள்ளைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேற்கு வங்காள முதல்வரான மம்தா பானர்ஜி மருத்துவமனைக்குச் சென்று பிள்ளைகளின் நலன்களை விசாரித்தார்.
பின்னர் பேசிய அவர், குழந்தைகள் நலமுடன் இருப்பதாகவும் பிள்ளைகளை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன் என்றும் கூறியுள்ளார்.
கனத்த மழை, திடீரென அதிகரிக்கும் வெப்பம் போன்ற பருவநிலை மாற்றத்தால் பிள்ளைகள் பாதிக்கப்பட்டடிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பேசிய பானர்ஜி, “பிள்ளைகள் காலை உணவைச் சாப்பிடவில்லை என்று நினைக்கிறேன். இக்காலப் பிள்ளைகள் காலை உணவைச் சாப்பிடாமல் உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றனர்,” என்று குறிப்பிட்டார்.
பிள்ளைகளுக்கு உரிய மருத்துவக் கவனிப்புகளை வழங்குமாறு அவர் மருத்துவர்களைக் கேட்டுக் கொண்டார்.
ஒரு பிள்ளையைத் தவிர மற்ற அனைவரும் விரைவில் வீடுதிரும்புவார்கள் எனத் தெரிகிறது.
பிள்ளைகள் பாதுகாப்பாக வீடு திரும்ப தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோல்கத்தா காவல்துறை கூறியது.

