தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி

உண்மை வெளியானதும் கடும் நடவடிக்கை எடுப்பதாக ஸ்டாலின் அறிவிப்பு

3 mins read
dd7dcdeb-3ff2-42d3-83a9-e04d2d8cad36
விஜய் பிரசாரக் கூட்டத்தில் மயங்கி விழுந்த ஒருவரை மருத்துவ ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர். - படம்: இந்து தமிழ் திசை

கரூர்: கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம் குறித்து விசாரணை முடிந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபடக் கூறியுள்ளார்.

வேலுசாமிபுரம் பகுதியில் சனிக்கிழமை தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40க்கு அதிகரித்துள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இது பற்றி கேள்வியுற்றதும் திரு ஸ்டாலின், விமானத்தில் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தார். மருத்துவமனைக்குச் சென்று நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தோர் குடும்பத்தினரையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதே நாளில் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திரு. ஸ்டாலின், கரூரில் நிகழ்ந்திருக்கும் இந்தக் கொடுரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாத அளவிற்கு சோகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார்.

“அதை பற்றி விவரமாக சொல்வதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. கனத்த இதயத்தோடு உங்கள் முன் நிற்கிறேன். கரூரில் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பல பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்ற செய்தி கிடைத்ததும் உடனே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விவரம் கேட்டறிந்தேன். ஓர் அரசியல் கட்சி கூட்டத்தில் இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் இதுவரை நடக்காதது. இனிமேல் நடக்கக் கூடாதது,” என்றார் அவர்.

நெரிசலில் சிக்கி காயமடைந்த 51 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு நபர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

“இந்த விசாரணையின் மூலம் உண்மை வெளிவரும். அரசியல் நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை. உண்மை வெளியானதும் உறுதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்றும் (செப்டம்பர் 28), நாளையும் (செப்டம்பர் 29) பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

திரு மு.க.ஸ்டாலின், இன்றைய தி.நகர் மேம்பால திறப்பு நிகழ்ச்சி, நாளை ராமநாதபுரம் செல்லும் நிகழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இரண்டு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தவெக தலைவர் விஜய், பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சமும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்,” என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

“கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உறவினரை இழந்த குடும்பத்தினர் கதறி அழுகின்றனர்.
உறவினரை இழந்த குடும்பத்தினர் கதறி அழுகின்றனர். - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்