உஜ்ஜைனி: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள தனியார் தங்குவிடுதி ஒன்றில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நால்வர் நச்சு வாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீ கங்கா என்ற பெயரில் இயங்கிவரும் அந்தத் தங்குவிடுதியில் சனிக்கிழமை (அக்டோபர் 31) இரவு அந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. தங்குவிடுதியின் கழிவுப்பகுதியைச் சீரமைக்க கமலேஷ் தம்போலி, நிதின் வால்மீக், மனோஜ் மீனா, வாஹித் ஆகிய நான்கு தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.
அப்போது அங்கு தேங்கியிருந்த நச்சுவாயு காரணமாக நால்வரும் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர்.
அவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் இரு தொழிலாளர்களும் நச்சுவாயுவின் தாக்கத்தால் மயக்கமடைந்தனர். தகவலறிந்து விரைந்துவந்த காவல்துறையினர், மீட்புப் படையினருடன் இணைந்து பாறை வெட்டும் கருவிகள் மூலம் தொட்டியைப் பிளந்து அனைவரையும் மீட்டனர்.
உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் நான்கு தொழிலாளர்களும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காப்பாற்றச் சென்ற இருவர் முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உஜ்ஜைனி மாவட்ட நிர்வாகம், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றித் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தி இறக்கப்பட்டனரா அல்லது எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மாநில முதல்வர் மோகன் யாதவ், நிவாரண உதவியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
