குற்றச் செயல்கள்வழி ரூ. 415 கோடி பெற்றதாக நம்பப்படும் அல் ஃபலா தலைவர்

2 mins read
385ef40d-0df5-46fd-92cd-daf677ef1222
அல் ஃபலா குழுமத்தின் தலைவர் ஜாவத் அஹ்மெத் சித்திக்கி. - படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் / இணையம்

புதுடெல்லி: அல் ஃபலா குழுமத்தின் தலைவர் ஜாவத் அஹ்மெத் சித்திக்கியின் நெருங்கிய உறவினர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கின்றனர்; அவருக்குக் குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட குறைந்தது ரூ. 415 கோடி (61,08 மில்லியன் வெள்ளி) தொகை அனுப்பப்பட்டதாக இந்திய அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் இந்தியாவிலிருந்து தப்பியோடுவதற்காக ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டதென ஆணையம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

அமலாக்கப் பிரிவு, அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் நாள் முழுவதும் சோதனைகளை நடத்திய பிறகு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) இரவு சித்திக்கியைக் கைது செய்தது. இம்மாதம் 10ஆம் தேதி டெல்லி செங்கோட்டைக்கு அருகே நடந்த வெடிப்பு தொடர்பிலான விசாரணையில் அல் ஃபலா பல்கலைக்கழகம் முக்கியமாக சம்பந்தப்பட்டுள்ளது.

அந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமுற்றனர்.

சித்திக்கி, நீதிபதி ‌ஷீத்தல் செளத்ரி பிரதானின் வீட்டில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சித்திக்கியிடம் விசாரணை நடத்த அவரை 14 நாள்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு அமலாக்கப் பிரிவு கோரியது.

வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரை சித்திக்கியை அமலாக்கப் பிரிவின் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவர்களுக்குப் போலியாக அங்கீகாரம் வழங்க அவர்களிடமிருந்தும் பெற்றோரிடமிருந்தும் சித்திக்கியின் உத்தரவில் அல் ஃபலா பல்கலைக்கழகமும் அதை நடத்தும் அறக்கட்டளையும் ரூ. 415.10 கோடி பெற்றதாக ஆணையம், நீதிமன்றத்திடம் தெரிவித்தது என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அவர் தலைமறைவானது, ஒத்துழைக்காதது ஆகியவற்றால் குழப்பம் ஏற்பட்டதால் அவரைக் கைது செய்யும் அவசியம் ஏற்பட்டதாக அமலாக்கப் பிரிவு விளக்கமளித்தது.

ஒட்டுமொத்த அல் ஃபலா கல்விக் கட்டமைப்பையும் சித்திக்கி கவனித்து வருகிறார். குற்றச் செயல்களின் மூலம் ஈட்டபட்டதாகக் கூறப்படும் ரூ. 415.10 கோடியில் ஒரு பங்கு மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு, நீதிமன்றத்திடம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்