புதுடெல்லி: நாடு முழுவதும் நடப்பு 2025-26 கல்வியாண்டில் 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) மத்திய சுகாதார இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் அளித்த தகவலின்படி, ஒரே கல்வியாண்டில் 11,682 இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களுக்கும், 8,967 முதுநிலைப் பட்டங்களுக்கான இடங்களுக்கும் (எய்ம்ஸ் உட்பட) மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மருத்துவத்துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் எதிரொலியாக மருத்துவக் கல்வி மீதான இளையர்களின் ஆர்வமும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்குமாறு பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கின்றன என்றும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான இணைய விண்ணப்பங்கள் குவிகின்றன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
“ஏற்கெனவே, நாடு முழுவதும் உள்ள கல்லூரி வசதி இல்லாத பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைத்து மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கும் மத்திய அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
“இத்திட்டத்தின் மூலம், இதுவரை ரூ. 41,332 கோடி செலவில், மூன்று கட்டங்களாக 157 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,” என அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் தெரிவித்துள்ளார்.

