தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் 47 பேர் சரண்

தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் 47 பேர் சரண்

1 mins read
d98439c9-c6ad-4f04-b487-2e4cb4835534
சரணடைந்த மாவோயிஸ்ட்டுகள் ஒப்படைத்த ஆயுதங்கள். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: பன்னெடுங்காலமாக மாவோயிஸ்ட் பிடியில் சிக்கியிருந்த நாடு அதிலிருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்தில் 47 மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் சரணடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாவோயிசத்தால் ஈர்க்கப்பட்ட நக்ஸலைட் கிளர்ச்சிப் படையினரில் எஞ்சியிருப்போரைத் தேடிப் பிடிக்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவின் காவல்துறை, 47 மாவோயிச உறுப்பினர்கள் சமூகத்தின் பொது நீரோட்டத்தில் இணையத் தாங்களாகவே முன்வந்ததாகத் தெரிவித்துள்ளது.

“தலைமறைவாக இருந்த எஞ்சியிருந்த முக்கியத் தலைவர்கள் ஏறக்குறைய அனைவரும் தற்போது சரணடைந்துவிட்டனர்” என்றும் அது குறிப்பிட்டது.

இந்தியாவை ‘நக்ஸல் இல்லாத நாடாக’ கடந்த மார்ச் 30ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார்.

1967ஆம் ஆண்டில், ஒரு சில கிராம மக்கள் தங்கள் நிலப்பிரபுக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததிலிருந்து, இப்போராட்டத்தில் 12,000க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டு விட்டனர்.

2000களின் நடுப்பகுதியில் இக்கிளர்ச்சி உச்சத்தில் இருந்தபோது, ​​கிட்டத்தட்ட 15,000 முதல் 20,000 வரையிலான போராளிகளுடன் அந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. படிப்படியாக, அந்த இயக்கம் முக்கியப் போராளிகளை இழந்து வலுவிழந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

சரணடைந்தோர் தவிர இன்னும் எஞ்சியிருப்போரும் தங்கள் ஆயுதங்களைத் துறந்து சரணடையுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்