தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியப் பொருள்களுக்கு 50 விழுக்காடு வரி அமலுக்கு வருவதாக அமெரிக்கா அதிகாரபூர்வ அறிவிப்பு

2 mins read
2f844ea1-b7cd-48d3-a92e-8f7bb9c758a3
இந்தியாவின் தொழில்களை அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்காக விட்டுக்கொடுக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான 50 விழுக்காடு வரி புதன்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக இந்தியப் பொருள்களுக்கு டிரம்ப் நிர்வாகம் 25 விழுக்காடு வரியை விதித்தது. பின்னர் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்று கூறி மேலும் 25 விழுக்காடு வரியை டிரம்ப் நிர்வாகம் விதித்தது.

இதனால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மொத்த வரி 50 விழுக்காடாகக் கூடியுள்ளது.

இதனால் இந்தியாவின் ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற முக்கிய ஏற்றுமதித் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரேன் போரை ஊக்குவிப்பதாகக் குற்றம்சாட்டி கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்தியப் பொருள்களுக்கு அபராதமாக 25 விழுக்காடு வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருந்தார்.

இந்தியாவுக்கான 40 விழுக்காட்டுக்கும் அதிகமான கச்சா எண்ணெய்க்கான தேவை ரஷ்யாவிடம் இருந்து பெறப்படுகிறது.

அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், ஆகஸ்ட் 6ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உத்தரவு எண் 14329ல் வரிகள் உயர்த்துவதை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்க அதிபர் கூறியிருந்த காலக்கெடுவான ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குப் பின்னர் கிடங்குகளில் இருக்கும் அனைத்துப் பொருள்களுக்கும் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

“அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தவறினால் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம். எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் வரும் வாரங்களில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படும்,” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இருப்பினும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் சீனா உட்பட பிற முக்கிய நாடுகள்மீது அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து வருகிறது.

முன்னதாக அகமதாபாத்தின் நிக்கோல் பகுதியில் திங்கட்கிழமை நடைபெற்ற ஒரு பெரிய கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எவ்வளவு அழுத்தம் வந்தாலும் அதைத் தாங்கும் சக்தியை அதிகரித்துக் கொள்வோம் என்று கூறியிருந்தார்.

“சிறு தொழில்முனைவோர், விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு எனது அரசாங்கம் ஒருபோதும் தீங்கு விளைவிக்க அனுமதிக்காது,” என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்குப் பிறகு அமெரிக்காவின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியப் பொருள்கள் மீதான புதிய வரிவிதிப்பு, புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிப்புச் சொற்கள்