மூன்று ஆண்டுகளில் 500 பில்லியன் வர்த்தகம்: செர்ஜியோ கோர் இலக்கு

மூன்று ஆண்டுகளில் 500 பில்லியன் வர்த்தகம்: செர்ஜியோ கோர் இலக்கு

படம்: என்டிடிவி

21 Oct 2026 - 5:31 pm

2 mins read

வாஷிங்டன்: இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்த ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கும் இதேபோன்று விருப்பம் இருப்பதாகத் தெரிவித்த அவர், அமெரிக்கா இதுவரை செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றார்.

உச்சத்தில் இந்திய-அமெரிக்க பங்காளித்துவம்

இதனிடையே, இந்தியா, அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ஏறக்குறைய ரூ.41 லட்சம் கோடி) இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ‘ஃப்ரீடம் 250’ நிகழ்ச்சியில் பேசிய அவர், இரு நாடுகளுக்கு இடையிலான பொருளியல், உத்திபூர்வப் பங்காளித்துவம் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வெறும் பேச்சுடன் நின்றுவிடாமல், களத்தில் உறுதியான முடிவுகளைச் சாதித்துக்காட்டுவதே நோக்கம் என்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தெளிவான வழிகாட்டுதலுடன் தாம் இந்தியா வந்துள்ளதாக திரு கோர் கூறினார்.

தற்போது இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் சாதனை அளவாக 240 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவ்வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தி, 500 பில்லியன் டாலர் இலக்கை விரைவாக எட்டுவதில் இரு நாடுகளும் தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக பகுதிமின்கடத்தி, முக்கியக் கனிமங்கள், ஆற்றல் துறை, தற்காப்புத்துறை, செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலத் தொழில்நுட்பப் பிரிவுகளில் பொருளியல் ஒத்துழைப்பு விரிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆழ்கடல் தரவு உள்கட்டமைப்பு முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை இந்த இருதரப்புப் பங்காளித்துவம் விரிவடைந்து வருவதாக திரு செர்ஜியோ கோர் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காவர்த்தகம்டோனல்ட் டிரம்ப்பகுதி மின்கடத்திசாதனைகனிமவளம்செயற்கை நுண்ணறிவு