மியன்மார், கம்போடியாவிற்கு 500 பேர் கடத்தல்; முக்கியக் குற்றவாளி கைது

2 mins read
46df0da7-1d6f-4f17-8851-9d6b13ae7c26
குஜராத்தின் காந்திநகரிலிருந்து மலேசியாவிற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது நீலேஷ் புரோகித் பிடிபட்டார். - படம்: இந்திய ஊடகம்

அகமதாபாத்: மியன்மார், கம்போடியா நாடுகளில் சீன மாஃபியா கும்பல்களால் இயக்கப்படும் இணைய மோசடி நிலையங்களில் இணைய அடிமைகளாகச் செயல்பட ஆள்களைக் கடத்தியது தொடர்பில் முக்கியக் குற்றவாளியாகச் சந்தேகிக்கப்படுபவரை குஜராத் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) கைதுசெய்தனர்.

‘தி கோஸ்ட்’ என அழைக்கப்படும் நீலேஷ் புரோகித் என்ற அந்த ஆடவர், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இதுவரை 500க்கும் மேற்பட்டோரைக் கடத்தியதாகக் காவல்துறை தெரிவித்தது.

குஜராத்தின் காந்திநகரிலிருந்து மலேசியாவிற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது புரோகித் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஹித்தேஷ் சோமய்யா, சோனல் பால்து என்ற அவரது இரு முக்கியக் கூட்டாளிகளும் கைதுசெய்யப்பட்டனர்.

விசாரணைக்காக புரோகித் 14 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த பவ்தீப் ஜடேஜா, ஹர்தீப் ஜடேஜா என்ற இருவரையும் காவல்துறை கைதுசெய்தது.

நன்கு திட்டமிடப்பட்ட அனைத்துலக இணைய அடிமைக் கடத்தல் கும்பலைப் புரோகித் நடத்திவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரது கட்டமைப்பில் 126 துணை முகவர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் 30க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் முகவர்களுடனும் 100க்கும் மேற்பட்ட சீன, வெளிநாட்டு நிறுவனங்களின் ஆட்சேர்ப்புக் கட்டமைப்புகளுடனும் நேரடித் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், மியன்மார், வியட்னாம், கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள இணைய மோசடி நிலையங்களுக்காக 1,000க்கும் மேற்பட்டோரை அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் புரோகித் செய்திருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. அவர் துபாய், லாவோஸ், தாய்லாந்து, மியன்மார், ஈரான் ஆகிய நாடுகளுக்கு அடிக்கடி சென்றுவந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்தியா, இலங்கை, பிலிப்பீன்ஸ், பாகிஸ்தான், நேப்பாளம், நைஜீரியா, எகிப்து, கெமரூன், பெனின், துனீசியா ஆகிய நாடுகளின் குடிமக்களுக்காக அவர் விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. மேலும், அவர் துபாய் வழியாக 500க்கும் மேற்பட்டோரை இணைய மோசடி நிலையங்களில் வேலை செய்வதற்காக மியன்மார், கம்போடியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளார் என்றும் காவல்துறை கூறியது.

தரவுப் பதிவு வேலைகளுக்கு அதிகச் சம்பளம் தருவதாகக் கூறி, டெலிகிராம், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் வழியாக அக்கும்பல் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

கடந்த மூவாண்டுகளில் மட்டும் தாய்லாந்து, மியன்மார் அரசுகளின் துணையோடு 4,000க்கும் மேற்பட்ட தனது குடிமக்களை இந்திய அரசு மீட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

அவர்களில் பலரும் ஆட்கடத்தலின் முக்கிய முகவராக புரோகித்தின் பெயரையே சொன்னதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்