நீலகிரி காட்டுத் தீயில் 5,000 ஏக்கர் வனப்பகுதி சேதம்

நீலகிரி காட்டுத் தீயில் 5,000 ஏக்கர் வனப்பகுதி சேதம்

1 mins read
e3376ff1-a24b-4bdc-9f6d-4c98a63963f3
ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலிக்கவில்லை என்று ஊடகங்கள் கூறின. - படம்: எம். சத்தியமூர்த்தி/த இந்து

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பார்சன்ஸ் வேலி, பைகாரா வனப்பகுதிகளில் கடந்த 10 நாள்களாகக் காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.

இந்தக் காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 5,000 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம், வறட்சி ஆகியவற்றால் தீ வேகமாகப் பரவி வருகிறது.

அத்துடன் அந்தப் பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

தீயணைப்புத் துறையினருடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் தேசியப் பேரிடர் மீட்புப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் காற்று வேகமாக வீசுவதால் தீயை முழுமையாக அணைக்க முடியாமல் அவர்கள் திணறுவதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே, போர்க்கால நடவடிக்கையாக சூலூர் விமானப் படைத் தளத்திலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனாலும் அந்த முயற்சி பலிக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து காற்று பலமாக வீசிய நிலையில் தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி கைவிடப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் கூறின.

குறிப்புச் சொற்கள்
நீலகிரிகாட்டுத் தீசேதம்