இமாச்சலப் பிரதேசத்தில் உயிரிழப்பு 55ஆக உயர்வு; சிவப்பு எச்சரிக்கை

2 mins read
59c1a1ea-3285-429f-a3d3-20b90ff77141
சிம்லா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து, உயிருடன் யாரும் உள்ளனரா எனத் தேடும் மீட்புப் பணியாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

சிம்லா: இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கொட்டித் தீர்த்த மழையிலும் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

“போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெள்ளத்திலும் இடிபாடுகளிலும் சிக்கியுள்ளோரை மீட்க முன்னுரிமை அளித்து வருகிறோம்,” என்று திரு சுக்விந்தர் கூறினார்.

சண்டிகர்-சிம்லா நால்வழி விரைவுச்சாலையும் மற்ற முதன்மைச் சாலைகளும் போக்குவரத்திற்கு மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

சிம்லாவில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் மட்டும் 14 பேர் இறந்துவிட்டனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் 24 பேர் மாண்டுவிட்டனர்.

அண்டை மாநிலமான உத்தராகண்டிலும் மழை காரணமாக மூவர் உயிரிழந்துவிட்டனர்; மேலும் பத்துப் பேரைக் காணவில்லை.

அம்மாநிலத்தின் ரிஷிகேஷில் திங்கட்கிழமை பெருமழை கொட்டித் தீர்த்தது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி கோவில்களுக்குச் செல்லும் சாலைகள் நிலச்சரிவால் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக அக்கோவில்களுக்கான புனித யாத்திரைகள் இரண்டு நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அம்மாநிலத்தின் ஜோஷிமத் நகரம் ஏற்கெனவே புதைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இப்போது மழையும் வெளுத்து வாங்குவதால் அந்நகரவாசிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அங்கு கட்டடங்களில் புதிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் பல பகுதிகளுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழையோ மிகக் கனமழையோ பெய்யக்கூடும் என அம்மையம் முன்னுரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்