புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில், கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக ஏறக்குறைய 23,000 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் கடந்த பத்து ஆண்டுகளாக உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 11.50 லட்சம் ஆகும்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கின் விசாரணையின்போது, மத்திய நீதித்துறை நிலுவை வழக்குகள் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், நீதிபதிகள் பற்றாக்குறையால் வழக்குகள் அதிக எண்ணிக்கையில் தேங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“நடந்து முடிந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய சட்ட அமைச்சு வழங்கிய எழுத்துப்பூர்வமான புள்ளி விவரங்களின்படி, கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக 63,239 வழக்குகளும், 20 முதல் 30 ஆண்டுகளாக 3.40 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. பல வழக்குகளில் தாமதமாக தீர்ப்புகள் வழங்கப்படுவதற்கு நீதிபதிகளின் பற்றாக்குறையும் ஒரு காரணம்.
“டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் பணியிடங்களில் 40% காலியாக இருக்கிறது. 25 உயர் நீதிமன்றங்களின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1,114. ஆனால், 770 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 344 பணியிடங்கள் காலியாக உள்ளன.
“நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் வெறும் 770 நீதிபதிகள் விசாரிக்க வேண்டியுள்ளது,” என நீதித்துறை கூறியுள்ளது.