புதுடெல்லி: கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 633 இந்திய மாணவர்கள் 41 வெளிநாடுகளில் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
கேரள மாநில எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இயற்கை மரணம், விபத்து, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் இறந்துபோனதாக வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.
ஆக அதிகமாக, கனடாவில் மட்டும் கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் 172 இந்திய மாணவர்கள் மரணமடைந்தனர். அமெரிக்கா (108), பிரிட்டன் (58), ஆஸ்திரேலியா (57), ரஷ்யா (37), ஜெர்மனி (24) ஆகிய நாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு பதிவானது.
அண்டை நாடான பாகிஸ்தானிலும் இந்திய மாணவர் ஒருவர் மாண்டுபோனதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் வெளிநாடுகளில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலில் இந்திய மாணவர்கள் 19 பேர் மாண்டுவிட்டனர். ஆக அதிகமாக கனடாவில் ஒன்பது பேரும் அமெரிக்காவில் அறுவரும் வன்முறைத் தாக்குதலால் உயிரிழக்க நேரிட்டது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா, கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் தலா ஓர் இந்திய மாணவர் வன்முறை காரணமாக உயிரிழந்தனர்.
இருப்பினும், கல்வி கற்பதற்காக வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூவாண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் 0.75 மில்லியனாகவும், 2023இல் 0.93 மில்லியனாகவும் இருந்த அந்த எண்ணிக்கை, தற்போது 1.33 மில்லியனாக உயர்ந்துவிட்டது என்று வெளியுறவு அமைச்சுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டு ஜனவரி 1 நிலவரப்படி, 13.35 லட்சம் இந்திய மாணவர்கள் 101 வெளிநாடுகளில் உயர்கல்வி பயின்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆக அதிகமாக, கனடாவில் 427,000 இந்திய மாணவர்கள் பயில்கின்றனர். அமெரிக்கா (337,000), பிரிட்டன் (185,000), ஆஸ்திரேலியா (122,000), ஜெர்மனி (42,997), ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ, 25,000), ரஷ்யா (24,940) ஆகிய நாடுகள் அதற்கடுத்த நிலைகளில் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சீனாவில் (ஹாங்காங்கையும் சேர்த்து) 8,580 இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். நியூசிலாந்து (7,300), நேப்பாளம் (2,134), சிங்கப்பூர் (2,000), ஜப்பான் (1,532), ஈரான் (1,020) ஆகிய நாடுகளும் அதிக அளவில் இந்திய மாணவர்களை ஈர்த்து வருகின்றன.
பாகிஸ்தானில் குறைந்தது 14 இந்திய மாணவர்கள் பயின்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனில் இன்னும் 2,510 இந்தியர்கள் உயர்கல்வி கற்றுவருவதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
சென்ற மூவாண்டுகளில் அமெரிக்காவிலிருந்து மட்டும் 48 மாணவர்கள் இந்தியாவிற்குத் திருப்பியனுப்பப்பட்டனர்.