புதுடெல்லி: கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்ல விசா கோரி, ஏறக்குறைய 67 லட்சம் பேர் விண்ணப்பித்தது தெரியவந்துள்ளது.
கொரோனா நெருக்கடி காலகட்டத்துக்கு முன்பு கடந்த 2019ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது.
கனடா, சீனா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, சவூதி அரேபியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை இந்தியர்களின் சுற்றுலாவுக்கான முக்கிய விருப்பத் தேர்வு நாடுகளாக உள்ளன என்கிறார் விசா ஆதாரம், தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான விஎப்எஸ் குளோபலின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான (தெற்கு ஆசியா) யம்மி தல்வார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் 3 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணமாகி உள்ளனர் என்றும் இந்த எண்ணிக்கையானது, 2023ஆம் ஆண்டுடன் (2.8 கோடி பேர்) ஒப்பிடுகையில் 8.4% அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், 2019ஆம் ஆண்டின் 2.7 கோடியுடன் ஒப்பிடுகையில் 12.3% என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
“பயணத்துக்கான தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டிலும் இந்நிலை நீடிக்கும். எனினும், கொரோனா நெருக்கடிக்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு இன்னும் அதிகரிக்கவில்லை,” என்கிறார் யம்மி தல்வார்.
கடந்த 2024ஆம் ஆண்டு 96.6 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். இது 2023ஆம் ஆண்டைவிட 1.4% அதிகம் என்று இந்திய சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

