உ.பி. திருவிழாவில் மேடை சரிந்து 7 பேர் உயிரிழப்பு

1 mins read
44c08907-ceb7-4861-b38b-6c7734b065ef
சரிந்துவிழுந்த மேடைக்கு அடியில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். - படம்: ஊடகம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் படக்ட் மாவட்டத்தில் சமண மத வழிபாட்டுத் தளத்தில் ஆண்டுதோறும் நிகழும் லட்டுத் திருவிழா நடைபெறுகிறது. அந்த விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு கடவுளுக்கு லட்டுகளைப் படைத்து வழிபடுவர்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த விழாவில், தற்காலிக வழிபாட்டு மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஏறி நின்று வழிபாடு செய்ய முந்தியடித்துக் கொண்டு சென்றனர். அப்போது, அந்த மேடை சரிந்து விழுந்தது. அந்தச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 40 பேர் படுகாயமடைந்ததாகவும் அவ்வட்டார அதிகாரிகள் கூறினர்.

மேடை சரிந்த தகவல் கிடைத்து அங்கு வந்த மீட்புப் படையினர், சரிந்து விழுந்த மேடையின் இடுக்குகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் துயரச் சம்பவத்தை அறிந்து உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உள்ளூர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது. அவ்விடத்தை விட்டு தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்த பக்தர்கள் பலர், கீழே விழுந்து காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்