தோக்கியோ: இந்தியாவிலுள்ள அனைத்து ‘7-இலெவன்’ கிளைகளும் செப்டம்பர் மாதத்தில் மூடப்பட்டுவிட்டதாக ஜப்பானில் உள்ள தலைமையகம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) தெரிவித்துள்ளது.
உள்ளூர் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் இந்தச் சில்லறை வர்த்தக நிறுவனம் சிரமப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .பல்வேறு நாடுகளில் இயங்கும் 7-இலெவன் கடைகள், பெரும்பாலும் 24 மணிநேரமும் செயல்படுகின்றன.
விரைவாக வாங்கிச் செல்லக்கூடிய சிற்றுண்டிகள், குளிர்பானங்கள், வீட்டுப் பொருள்கள் போன்றவற்றுக்காக பெயர்பெற்ற நிறுவனமாக அது திகழ்கிறது.
“மும்பை, புனே ஆகிய நகரங்களில் 7-இலெவன் கடைகளை இயக்கி வரும் எங்களின் முதன்மை உரிமையாளரான ரிலையன்ஸ் நிறுவனம், செப்டம்பர் 30ஆம் தேதி தனது அனைத்து 31 கடைகளையும் மூடிவிட்டதை உறுதிப்படுத்துகிறோம்,” என்று ‘செவன் அன்ட் ஐ ஹோல்டிங்ஸ்’ (Seven & i Holdings) அறிக்கை ஒன்றின்வழி தெரிவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ நிறுவனத்துடன் உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, 2021 அக்டோபரில் மும்பையில் அந்த நிறுவனம் தனது முதல் இந்தியக் கிளையைத் தொடங்கியது.
பின்னர், அந்நிறுவனம் ஆக அதிகமாக கிட்டத்தட்ட 60 கிளைகள் வரை திறந்ததாக ‘செவன் அன்ட் ஐ ஹோல்டிங்ஸ்’ செய்தித் தொடர்பாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கடைகள் மூடப்பட்டதற்கான காரணம் குறித்துக் கருத்துத் தெரிவிக்க ‘செவன் அன்ட் ஐ ஹோல்டிங்ஸ்’ மறுத்துள்ளது.
ஆனால், உள்ளூர் இந்திய சில்லறை விற்பனையாளர்களிடம் நிலவிய கடுமையான போட்டியை எதிர்கொள்ள முடியாமல் நிறுவனம் சிரமப்பட்டதாக ஜப்பானின் தேசிய நாளிதழ்களான நிக்கேய், யோமியுரி ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன.
