குஜராத்தில் நள்ளிரவில் கழிவறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை

குஜராத்தில் நள்ளிரவில் கழிவறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை

1 mins read
ec54c413-6e05-47bf-9bb7-865cc81a57d2
தமது வீட்டின் கழிவறைக் கதவைத் திறந்த பாலாபாய் சவுகான் என்பவர், அதனுள்ளே 7 அடி நீள முதலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். - படங்கள்: இந்தியா டுடே

அகமதாபாத்: குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைக்குள் 7 அடி நீள முதலை புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலாபாய் சவுகான் என்பவரின் வீட்டுக்கு வெளியே நள்ளிரவில் நாய்கள் தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்தன.

இதனால் சந்தேகமடைந்த பாலாபாய், கழிவறையைத் திறந்து பார்த்தபோது அங்கிருந்த பிரம்மாண்ட முதலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அது குறித்து அவரின் குடும்பத்தினர் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, வனப் பாதுகாவலர்கள் நீலேஷ் பர்வாட், மனீஷ் பிரஜாபதி ஆகியோர் அடங்கிய மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தயா அறக்கட்டளையின் தலைவர் நிதேஷ் சவுகான், தொண்டூழியர் துஷார் ராணா ஆகியோரின் உதவியுடன் மீட்புக் குழுவினர் ஏறத்தாழ ஒரு மணி நேரம் போராடி முதலையைப் பாதுகாப்பாக மீட்டனர்.

பிடிபட்ட முதலை பின்னர் அருகில் உள்ள குளத்தில் விடுவிக்கப்பட்டது.

பருவமழைக் காலத்தில் குளங்களில் நீர்மட்டம் உயர்வதால் முதலைகள் உணவுக்காகவும் உடல் வெப்பநிலையைச் சீராக்கவும் இருப்பிடங்களைவிட்டு வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அருகில் உள்ள மலதாஜ் கிராமக் குளத்தில் 100க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதால் குடியிருப்பாளர்கள் இரவில் விழிப்புடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்