70 அடி உயர லயனல் மெஸ்ஸியின் சிலை: கோல்கத்தாவில் அவரே திறந்து வைத்தார்

2 mins read
c59c0bb7-1345-4e8a-a6ca-1daf1a112206
கோல்கத்தாவில் உள்ள விளையாட்டுத் திடலில் லயனல் மெஸ்ஸியைக் காணத் திரண்டிருந்த ரசிகர்கள். - படம்: இபிஏ
multi-img1 of 2

கோல்கத்தா: ‘கோட் இந்தியா’ சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் அர்ஜெண்டினா காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி கோல்கத்தாவில் தமது 70 அடி உயரச் சிலையை திறந்து வைத்தார்.

முன்னதாக, அவர் சனிக்கிழமை (டிசம்பர் 13) அதிகாலை 2.26 மணிக்கு தனது தனிப்பட்ட விமானத்தில் கோல்கத்தாவிலுள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

சக வீரர்களான லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் அவருடன் வந்தனர்.

அந்த அதிகாலைப் பொழுதிலும் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்து ‘மெஸ்ஸி, மெஸ்ஸி’ என்று முழங்கினர்.

பின்னர், நேராக ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு மெஸ்ஸி புறப்பட்டுச் சென்றார்.

ஹோட்டலுக்கு வெளியேயும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மெஸ்ஸியைக் காண திரண்டிருந்தனர்.

இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் அவர்களை மெஸ்ஸி சந்திக்கவில்லை.

விமான நிலையத்திலும் ஹோட்டலைச் சுற்றிலும் காவல்துறையினர் அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்தனர்.

கோல்கத்தாவில் சனிக்கிழமை தமது ‘கோட் (GOAT) இந்தியா’ சுற்றுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார்.

சந்தோ‌ஷ் கோப்பையை வென்ற மேற்கு வங்க அணியைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாலிவுட் நடிகர் ‌ஷாருக் கானுடன் மெஸ்ஸி கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பின்னர், லேக் டவுன் பகுதியில் எழுப்பப்பட்டுள்ள தமது 70 அடி உயரச் சிலையை மெஸ்ஸி திறந்து வைத்தார்.

சனிக்கிழமை பிற்பகலில் ஹைதராபாத் சென்ற அவர், ராஜீவ் காந்தி அனைத்துலக திடலில் நடைபெற்ற சிறிய அளவிலான கண்காட்சி காற்பந்துப் போட்டியில் பங்கேற்று விளையாடுவார் என்றும் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அவருடன் சேர்ந்து விளையாடுவர் என்றும் தகவல்கள் கூறின.

ஞாயிற்றுக்கிழமை மும்பையிலும் டெல்லியிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கும் மெஸ்ஸி, மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவார் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவித்து உள்ளன.

குறிப்புச் சொற்கள்