புதுடெல்லி: இந்தியாவின் நீதித்துறையில் நிலவும் கடுமையான ஆள்பற்றாக்குறை காரணமாக, நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 7,300க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்களும், மாநில உயர் நீதிமன்றங்களில் ஏறக்குறைய 300 நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளன.
இதனால், நாடு முழுவதும் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5.8 கோடியைத் தாண்டியுள்ளதாக தேசிய நீதித்துறை தரவுக் கட்டமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்களில் ஏறக்குறைய 25 விழுக்காடு காலியாக உள்ளன.
நீதிமன்ற அறைகளுக்கு வெளியே நீதிபதிகள் விடுமுறையில் இருப்பதாகவோ அல்லது பணியிடம் காலியாக உள்ளதாகவோ அறிவிப்புகள் காணப்படுகின்றன. வழக்கு சார்ந்த ஏராளமான கோப்புகள், 10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகக் காத்திருக்கின்றன.
இது சட்டத்தின் தோல்வியல்ல என்றும் நீதிபதிகளை நியமிப்பதில் ஏற்படும் நிர்வாகத் தோல்வி என்றும் அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஆர். சிங் கூறியுள்ளார்.
ஒரு நீதிபதி எப்போது ஓய்வு பெறுவார் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்றும் ஆனால், அவர் ஓய்வு பெற்ற பிறகே புதிய நியமனத்திற்கான நடைமுறைகள் தொடங்குகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
நீதிபதிப் பணியிடம் காலியாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே பரிந்துரைகளை அனுப்ப வேண்டும் என்றும் இதற்கான செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் முன்னாள் கூடுதல் அரசு வழக்கறிஞர் கே.சி. கௌசிக் கூறியுள்ளார்.
நீதிபதிகளுக்கான பணியிடங்களில் நான்கில் ஒரு பங்கு நாற்காலிகள் காலியாக இருக்கும்போது விரைவான நீதியை எவ்வாறு வழங்க முடியும் என்று பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் மட்டும் ஏறக்குறைய 95,000 வழக்குகளும் உயர் நீதிமன்றங்களில் 65 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
