தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

71 வயது காதலியைக் கொன்ற 75 வயது காதலன்

2 mins read
af259238-a1b4-428d-a82c-19bd41eb7853
ரூபிந்தர் கவுர் பாந்தர், சரண்ஜீத் சிங். - படம்: ஊடகம்

லுாதியானா: தமது 75 வயது காதலரைத் திருமணம் செய்ய அமெரிக்காவிலிருந்து இந்தியா சென்ற 71 வயது மூதாட்டி கூலிப்படையினரால் எரித்துக் கொல்லப்பட்டார். விசாரணையில் காதலரே அவரைக் கொன்றது தெரியவந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த ரூபிந்தர் கவுர் பாந்தர் என்று இந்திய வம்சாவளிப் பெண், மணவிலக்கு பெற்று தனியே வசித்து வந்தார்.

இவருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த வெளிநாடுவாழ் இந்தியரான சரண்ஜீத் சிங் கிரேவால் என்பவருக்கும் சமூக ஊடகம் வழியாக மலர்ந்த நட்பு பின்னர் காதலாக மாறியது. கிரேவாலும் மனைவியைப் பிரிந்தவர்.

அதனைத் தொடர்ந்து, 70 வயதைக் கடந்த இந்தக் காதலர்கள், திருமணத்தை இந்தியாவில் நடத்த முடிவுசெய்தனர். குறிப்பாக, தன் சொந்த ஊரான பஞ்சாப்பின் லுாதியானாவில் திருமணத்தை நடத்த விரும்பினார் கிரேவால்.

இதற்காக கடந்த ஜூலை மாதமே ரூபிந்தர் இந்தியா சென்றுவிட்டார். ஆனால், அவர் திடீரென மாயமானதை அடுத்து, எந்த அழைப்பும் வராததால் சந்தேகம் அடைந்த ரூபிந்தரின் மூத்த சகோதரி கமலா, டெல்லியில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் உதவியை நாடினார்.

அதனையடுத்து, விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை, காதலர் கிரேவாலிடம் விசாரிக்க முயன்றபோது, அவரும் மாயமானது தெரியவந்தது. மேலும், கிரேவாலுக்கு குறிப்பிட்ட ஓர் எண்ணில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த எண்ணுக்கு உரியவரான பஞ்சாப் மாநிலம், மல்காபட்டியைச் சேர்ந்த சுக்ஜீத் சிங் சோன் என்பவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

அப்போது, கிரேவாலின் தூண்டுதலால் அவருடைய காதலியைக் கொன்றதை சுக்ஜீத் ஒப்புக்கொண்டார்.

மேலும், தன் காதலி ரூபிந்தரிடம் அடிக்கடி கிரேவால் பணம் வாங்கியதும் அதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராது ஏற்பட்டதும் விசாரணையின்போது தெரியவந்தது.

ஒரு கட்டத்தில் பணம் தருவதை நிறுத்திய ரூபிந்தர், ஏற்கெனவே கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டதால் கிரேவால் சினமடைந்தார்.

எனவே, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, ரூபிந்தரை இந்தியாவுக்கு வரவழைத்துக் கொலைசெய்தது வெளிச்சத்துக்கு வந்தது.

குறிப்புச் சொற்கள்