பெங்களூரு: கடந்த 30 ஆண்டுகளில் உலக அளவில் பருவநிலை மாற்றம் தொடர்பான தீவிர வானிலை நிகழ்வுகளால் 916,000 பேர் உயிரிழந்தனர்.
இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட உலகின் 10 நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என 2027 பருவநிலை அபாயக் குறியீடு தெரிவிக்கிறது. ஜெர்மன்வாட்ச் அமைப்பு வெளியிட்ட ஆய்வை டேவிட் எக்ஸ்டீன் குழுவினர் மேற்கொண்டனர்.
தீவிர வானிலை நிகழ்வுகள் நாடுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அது ஆராய்கிறது. மேலும், நேரடிப் பொருளியல் இழப்பு 4.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
தீவிர வானிலை நிகழ்வுகளால் டொமினிகா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. தொடர்ந்து ஏற்படும் பேரிடர்களால் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.
மியன்மார், ஹோண்டுராஸ், லிபியா, ஹெய்ட்டி, கிரெனடா, பிலிப்பீன்ஸ், நிக்கராகுவா, பஹாமாஸ் ஆகியவையும் அதில் இடம்பெற்றுள்ளன.
30 ஆண்டுகளில் இந்தியா 436 தீவிர வானிலை நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது. அதனால் 78,000 மரணங்களும் 170 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலான பொருளியல் இழப்புகளும் ஏற்பட்டன.
புயல்கள், அனல் காற்று, வறட்சி, வெள்ளத்தால் இந்தியாவில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
1998 குஜராத், 1999 ஒடிசா புயல்கள், 2014, 2020இல் ஹுட்ஹுட், ஆம்பன் புயல்கள், 2013 உத்தராகண்ட் வெள்ளம், 2019ல் 13 மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவை பேரிழப்புகளை ஏற்படுத்தின.
1998, 2002, 2003, 2015 ஆகிய ஆண்டுகளில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வீசிய தீவிர அனல் காற்று பல உயிர்களைப் பறித்தது.
கடந்த 30 ஆண்டுகளில் உலக அளவில் அனல் காற்றால் 364,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தொடர்ந்து புயல்களால் 276,000, வெள்ளத்தால் 200,000, வறட்சியால் 25,373 பேர் உயிரிழந்துள்ளனர்.
அனல் காற்று தனித்து ஏற்படுவதில்லை; வறட்சி போன்ற நிகழ்வுகளுடன் இணைந்து செயல்படும் என ஆய்வு குறிப்பிட்டது.
பருவநிலை மாற்றம் அனல் காற்றை மோசமாக்குகிறது. உலகளாவிய வெப்பநிலை உயர்வே தீவிர வெப்பத்திற்கு முக்கியக் காரணியாகும்.
மற்ற நிகழ்வுகளை விட அனல் காற்றில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எளிதாக உறுதிப்படுத்த முடியும். இவை விவசாயத்தையும் உணவுப் பாதுகாப்பையும் பாதிக்கின்றன.
