புதுடெல்லி: உலக அளவில், அரிய வகை கனிமங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக இந்திய சுரங்கத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கனிம வளங்கள் தொடர்பாக, பிரேசில், டொமினிகன் குடியரசு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வது தொடர்பாக, தமது அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஸாம்பியா நாடுகளுடனும் அனைத்துலக எரிசக்தி அமைப்புடனும் இதுதொடர்பாக இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் 85.2 லட்சம் டன் அரிய வகை கனிமங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
“அரிய வகை கனிமங்களை உற்பத்தி செய்வதில், இதுவரை முன்னணியில் இருந்த மிகப் பெரிய உற்பத்தியாளரான சீனா, கடந்த ஏப்ரல் முதல் அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
“இதனால் உலக அளவில் மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தற்காப்புத் துறை சார்ந்த உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது,” என்றார் அமைச்சர் ஜிதேந்திர சிங்.
ஆந்திரப்பிரதேசம், தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் எட்டு மாநிலங்களின் கடல் பகுதிகளை ஒட்டி, 72.30 லட்சம் டன் அரிய வகை கனிமங்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள கனமான பாறைகளில் 12.90 லட்சம் டன் அரிய வகை கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் அணு கனிம ஆய்வு, ஆராய்ச்சி இயக்குநரகம், நாட்டின் கடலோர, நதிக்கரை பகுதிகளில் அரிய வகை கனிமங்கள் இருப்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த 10 ஆண்டுகளில் 18 டன் அளவிலான அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன,” என்று மக்களவையில் அமைச்சர் ஜிதேந்திர சிங் மேலும் தெரிவித்தார்.