மியன்மாரில் இணைய அடிமைகளாகச் சிக்கித் தவிக்கும் 800 இந்தியர்கள்

மியன்மாரில் இணைய அடிமைகளாகச் சிக்கித் தவிக்கும் 800 இந்தியர்கள்

இணங்கி நடக்காதோர்க்கு மின்சார அதிர்ச்சி தந்து கொடுமை
வரைகலை: செயற்கை நுண்ணறிவு

04 Jul 2026 - 5:38 pm

2 mins read

புனே: அதிக ஊதியத்துடன் கூடிய வேலை எனக் கூறி, சமூக ஊடகத்தில் வெளியான போலி விளம்பரத்தை நம்பிச் சென்று, மியன்மார் நாட்டில் உள்ள இணைய மோசடி முகாம்களில் கிட்டத்தட்ட 800 இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், பீடு மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது வரைகலை வடிவமைப்பாளர் ஒருவர்மூலம் இத்தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் எப்படியோ வாட்ஸ்அப் வழியாக தம் மனைவியைத் தொடர்புகொண்டு, அங்கு நடக்கும் கொடுமைகளை விவரித்தார்.

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் தரவு உள்ளீடு வேலைக்காக மாதம் 70,000 ரூபாய் ஊதியம் தருவதாகக் கூறி, கடந்த ஜூன் 4ஆம் தேதி புனேவிலிருந்து அந்த ஆடவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால், அவர் அங்குத் தரையிறங்கியதும் கடத்தப்பட்டு, தாய்லாந்து - மியன்மார் எல்லைப் பகுதியிலுள்ள ரகசிய முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டார். அவரது பயண ஆவணங்கள் அனைத்தையும் மோசடிக் கும்பல் பறித்துக்கொண்டது.

தற்போது அங்கு தம்மைப் போன்ற 700-800 இந்தியர்கள் சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 20-25 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் விவரித்தார்.

இணையவழி மோசடி வேலைகளைச் செய்ய மறுப்போர்க்குக் கொடூரமான மின்சார அதிர்ச்சி கொடுக்கப்படுவதாகவும் ஒவ்வொரு நாளும் 16 முதல் 18 மணி நேரம் வரை கட்டாய வேலை வாங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மோசடிப் பேர்வழிகளை எதிர்த்துக் கேள்வி கேட்ட இரண்டு, மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் அவர் கண்ணீருடன் தம் மனைவியிடம் தெரிவித்தார்.

அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி, உடனே பீடு மாவட்ட இணையக் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அனைத்துலக விவகாரம் என்பதால் இதனைப் பற்றி வெளியுறவு அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுசென்றுள்ளதாக பீடு இணையக் காவல் ஆய்வாளர் நீலேஷ் கேலே தெரிவித்தார்.

இதன் தொடர்பில் மற்ற மத்தியப் புலனாய்வு அமைப்புகளும் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதனிடையே, அரசாங்கம் உடனே தலையிட்டு, மியன்மாரில் சிக்கியுள்ளவர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாமியன்மார்இணைய மோசடிசித்திரவதைதாய்லாந்து