8,750 சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

8,750 சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

127 நிறுவனங்களுக்குக் கர்நாடகக் காவல்துறை அறிவிப்புக் கடிதம்
படம்: பிடிஐ/ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்

03 Jun 2026 - 6:30 pm

2 mins read

பெங்களூரு: ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்தியா முழுவதும் 8,750 சூதாட்டச் செயலிகள், இணையத்தளங்களை முடக்கிய கர்நாடக மாநில இணையக் குற்றப் பிரிவு, இப்போது இணையச் சூதாட்டக் கட்டமைப்புகளை வேரோடு ஒழிப்பதற்கான அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம், ‘பிஎன்எஸ்’ பிரிவுகளின்கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய சூதாட்டத் தளங்கள் உருவாவதைக் கண்காணிக்கவும் அவற்றை முடக்கவும் 127 இணையச் சேவை நிறுவனங்களுக்கு இணையக் குற்றப் பிரிவு காவலர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஏற்கெனவே, 37 இணையச் சேவை வழங்குநர்களின் உதவியுடன் கடந்த ஐந்து நாள்களில் மட்டும் ஆயிரக்கணக்கான இணையத்தளங்களைக் காவலர்கள் முடக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தித்தளங்கள் தவறுதலாக முடக்கம்

ஒரேமாதிரியான பெயர்கள், கைப்பேசிச் செயலிகள், அதுதொடர்பான இணைய முகவரிகளைக் கொண்டிருந்ததால் கணினிச் செயல்முறை மூலம் சில முறையான செய்தி இணையத்தளங்களும் தவறுதலாக முடக்கப்பட்டன. இது தற்காலிகச் சவாலாக உருவெடுத்துள்ளதாக இணையக் குற்றப் பிரிவு டிஜிபி பிரணாப் மொகந்தி தெரிவித்தார்.

மூன்றுகட்ட நடவடிக்கை

இணையச் சூதாட்டக் கட்டமைப்பை வேரோடு ஒழிக்க மூன்றுகட்டத் திட்டத்தை அமல்படுத்தி வருவதாக ஏடிஜிபி எம்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக, ‘1xBet’ போன்ற முன்னணி சூதாட்ட நிறுவனங்கள் காவலர்களை ஏமாற்றப் பயன்படுத்தும் ‘மிரர் டொமைன்ஸ்’ உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்ட மாற்று முகவரிகளைக் கண்காணித்து முடக்குவது.

இரண்டாவது கட்டமாக, சூதாட்டத் தளங்களுக்கு இணையச் சேவை வழங்கும் இடைத்தரகர்களான 127 இணையச் சேவை நிறுவனங்களுக்குக் கடிதம் அனுப்பி ஒத்துழைப்பு கோருவது.

‘சேஃப் ஹார்பர்’ சட்டப் பாதுகாப்பைக் காரணம் காட்டி அவர்கள் தப்பிக்க முயன்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவலர்கள் எச்சரித்துள்ளனர்.

மூன்றாவது கட்டமாக, 37 இணையச் சேவை வழங்குநர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு ஆகியோரின் உதவியுடன் சூதாட்டப் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்து அதன் மூலாதாரமாக விளங்குபவர்களைக் கைது செய்வது.

பொதுமக்கள் தங்களுக்குத் தெரியவரும் இணையச் சூதாட்டப் புகார்கள் குறித்து உடனடியாக இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு காவலர்களுக்குத் தெரிவிக்கும்படி ஏடிஜிபி சந்திரசேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
இணையத்தளம்சூதாட்டம்கர்நாடகம்செய்திஅதிரடி நடவடிக்கை