திருவனந்தபுரம்: ஒன்பது வயதுச் சிறுமி மூளையில் ஏற்பட்ட அரிய வகை தொற்றால் உயிரிழந்தது கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி பகுதியைச் சேர்ந்த அனயா என்ற அச்சிறுமி, கடந்த சில நாள்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அன்றைய தினமே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அனயாவின் உடல்நலம் ஏன் பாதிக்கப்பட்டது என்பதைக் கண்டறிய விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறுமியின் மூளையில் அரிய வகை தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
‘அமீபா’ என்று குறிப்பிடப்படும் இந்த அரிய வகை தொற்றால் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும், நடப்பாண்டில் அனயா உட்பட நான்கு பேர் மாண்டுவிட்டனர்.
மூளைத் திசுக்களைத் தின்றுவிடும் ‘அமீபா’, மாசடைந்த ஏரி, குளம், ஆறுகளில் உயிர் வாழும். இந்த நீர்நிலைகளில் குளித்தால் மூளைவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சிறுமியின் இறப்பைத் தொடர்ந்து அவர் வசித்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் கண்டறியப்படும் என்றும், அங்கு குளித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசாங்கம் மேலும் உயிரிழப்புகள் நிகழாமல் தடுப்பதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.