கடத்தல் முயற்சி: நேப்பாள எல்லையில் ஆறு இந்தியப் பெண்கள் மீட்பு

கடத்தல் முயற்சி: நேப்பாள எல்லையில் ஆறு இந்தியப் பெண்கள் மீட்பு

2 mins read
43d7d31e-05e3-4618-83eb-40e27e56e432
பெண்களைக் கடத்த முயன்ற இருவரும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் சிக்கினர். - படம்: தினத்தந்தி
Google News Preferred Icon

கோல்கத்தா: பெருவெள்ளம் காரணமாக ஒட்டுமொத்த நேப்பாளமும் நிலைகுலைந்துள்ள வேளையில், அந்நாட்டுக்கு பெண்களைக் கடத்த முயன்ற சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்திய-நேப்பாள எல்லையான மேற்கு வங்க மாநிலம் பானிடாங்கி பகுதியில், கடத்தல் கும்பலிடம் இருந்து சிறுமிகள் உட்பட ஆறு பெண்களை எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு சிறுமிகளும் இரண்டு பெண்களும் நேப்பாளத்திற்குக் கடத்தப்பட இருந்ததாகவும் வழக்கமான சோதனை நடவடிக்கையின்போது அச்சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண்களைக் கடத்த முயன்ற நிர்மல் தேபர்மா (திரிபுரா), சின்மய் பசாக் (மேற்கு வங்கம்) ஆகிய இருவரும் சிக்கியுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது நேபாளத்தில் உள்ள நடனக்கூடத்தில் பணிபுரிய ஆறு பேரும் கடத்தப்பட்டது தெரியவந்தது.

நேப்பாள நடனக்கூடத்தில் நடனமாடினால் அதிக ஊதியம் கிடைக்கும் என்று பெண்களிடம் கூறப்பட்டுள்ளது. அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு தாங்கள் நேப்பாளம் செல்ல ஒப்புக்கொண்டதாக மீட்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் செல்லவிருக்கும் இடம், எங்கு பணியாற்ற வேண்டும், அல்லது நேபாளத்தில் எவ்வளவு காலம் தங்குவார்கள் என்பது போன்ற தெளிவான விவரங்களை அவர்களால் வழங்க முடியவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆறு பேருடன் எல்லையைக் கடந்த நேப்பாளம் செல்ல தகுந்த ஆவணங்களைக் கைது செய்யப்பட்ட இருவரால் தர இயலவில்லை என்றும் இதன் காரணமாகவே இருவரும் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அதிகாரி மேலும் கூறினார்.

மீட்கப்பட்ட பெண்கள் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, உரிய ஆலோசனைக்குப் பின் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்