ஓசூர்: தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு அருகே டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
அத்தொழிற்சாலையில் திங்கட்கிழமை (நவம்பர் 9) கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையப் பராமரிப்புப் பணி நடந்தது. அப்போது நச்சுவாயுவைச் சுவாசித்த மூன்று ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்தனர்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் சாதனங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் அத்தொழிற்சாலை, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அமைந்துள்ள முக்கிய உற்பத்தி நிலையமாக விளங்குகிறது.
அந்த ஆலையில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில், வெளிப்புற வடிகட்டித் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டிந்தது.
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட நால்கோ வாட்டர் நிறுவனம், அத்தொட்டிக்கானப் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், நவம்பர் 9ஆம் தேதி அத்தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் தர்மபுரி மாவட்டம், பெல்ராம்பட்டி கிராமத்தை சேர்ந்த 25 வயது சாரதிகுமார், பஞ்சப்பள்ளி அருகே தின்னுாரை சேர்ந்த 28 வயது அக்மல், அனுமந்தபுரம் அருகே ஜம்பூத் கிராமத்தை சேர்ந்த 31 வயது காவேரி ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது விஷவாயு தாக்கியதில், அவர்கள் மூவரும் தொட்டிக்குள் மயங்கி விழுந்து மூழ்கினர். அவர்களை மீட்ட டாடா எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகம், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியது. அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஒப்பந்த ஊழியர்களின் மரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகத் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறைக்கான அமைச்சர் ச. கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ஐஃபோன் உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்களிப்பை வழங்கிவரும் வேளையில், டாட்டா எலக்ட்ரானிக்சின் ஓசூர் தொழிற்சாலை தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஏற்கெனவே, அங்கு ஏற்பட்ட தீ விபத்து, நிலத்தடி நீர் மாசு சர்ச்சை, தீங்கு நிரல் தாக்குதல் போன்றவற்றால் தொடர் பின்னடைவுகளை அது சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
