விபத்தில் சிக்கி சாலையில் நான்கு மணிநேரமாகக் கிடந்த உடல்

2 mins read
‘இது எங்கள் வேலை அல்ல’ என்று கூறும் 2 மாநிலங்கள்
51746f76-ad3a-4d23-a9ca-1dac79a2bedc
வேலைக்காக டெல்லிக்குச் சென்ற 27 வயது ராகுல் அகிர்வார், விபத்தில் சிக்கி மாண்டார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லிக்குக் கிளம்பிய ராகுல் அகிர்வார் என்பவர், சாலையைக் கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.

அதையடுத்து, அந்த 27 வயது ஆடவரின் உடல், சாலையில் நான்கு மணிநேரத்திற்கும் மேலாகக் கிடந்தது.

காரணம், தங்களது அதிகார வரம்பு குறித்து உத்தரப் பிரதேச, மத்தியப் பிரதேசக் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட சச்சரவே.

விபத்து நடந்து வட்டாரவாசிகள் பலர் அங்குக் கூடியதை அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஹர்பால்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்தை அதிகாரிகள் அடைந்ததும் உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த மஹோப்காந்த் காவல் நிலையத்தின் கீழ் இச்சம்பவம் வரும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

உடனே, உத்தரப் பிரதேசக் காவல் நிலையத்திற்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், அந்த அதிகாரிகளும் பொறுப்பேற்காமல் இது மத்தியப் பிரதேசக் காவல் அதிகாரிகளின் வேலை என்றனர்.

மக்கள் உடனே சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இறந்தவரின் உடல் தொடர்ந்து சாலையில் கிடந்தது.

அதன் பிறகு, மத்தியப் பிரதேசக் காவல்துறையினர் உடலை மீட்டு, அதை உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பினர்.

இந்த நடவடிக்கைக்குப் பின்னரே சாலையை விட்டு மக்கள் அகன்றனர்; போக்குவரத்தும் பழைய நிலைக்குத் திரும்பியது.

விபத்தில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் உடலின் அருகே அழுதபடி இருப்பதைக் காட்டும் படங்கள் இணையத்தில் வலம்வந்த வண்ணம் உள்ளன.

இறந்தவர் அண்மையில்தான் திருமணம் செய்துகொண்டார் என்றும் வேலைக்காக டெல்லிக்குப் பயணம் செய்யவிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்