புதுடெல்லி: இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் கூட்டத்தின்போது சந்தித்துக்கொண்டனர்.
அந்தச் சந்திப்பு தொடர்பாக சீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தைவான் மற்றும் திபெத் மீதான இந்தியாவின் நிலைப்பாடு மாறாமல் இருப்பதாகவும் சீனாவின் அரசுரிமையை இந்தியா மதிப்பதாகவும் டாக்டர் ஜெய்சங்கர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.
அது தொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால் கூறுகையில், “இந்தியா எந்த வகையிலும் சீனாவின் அரசுரிமையை மீறுவதில்லை; மேலும் அதில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது,” என்றார்.
மாறாக, சீனாதான் இந்திய நிலப்பரப்பைச் சட்டவிரோதமாகத் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாகவும் இந்தியாவுக்கு உரிமையுள்ள பகுதிகளில் சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் திரு ஜெய்ஸ்வால் தமது வாராந்தர செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
சீனா 1963 முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் இந்தியாவின் எல்லைப் பகுதியில் அது சட்டவிரோதமாக உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
1963ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே கையெழுத்தான எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்த இந்திய நிலப்பரப்பான சாக்ஸ்கம் பள்ளத்தாக்கின் 5,180 சதுர கிலோமீட்டர் பரப்பளவைச் சீனாவுக்கு விட்டுக் கொடுத்தது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் முழுமையாகவும் பிரிக்க முடியாதபடியும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக உள்ளன என்பதால், அந்த 1963 ஒப்பந்தத்தை இந்தியா தொடக்கத்திலிருந்தே சட்டவிரோதமானது மற்றும் செல்லாதது என நிராகரித்து வருகிறது.

