நேப்பாளப் பெருவெள்ளத்தில் மாயமான 213 இந்தியர்களை இறந்தவர்களாக அறிவிக்க நடவடிக்கை

நேப்பாளப் பெருவெள்ளத்தில் மாயமான 213 இந்தியர்களை இறந்தவர்களாக அறிவிக்க நடவடிக்கை

கோப்புப் படம்: மாலை மலர்

26 Nov 2026 - 7:57 pm

2 mins read

காத்மாண்டு: நேப்பாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெரும் பேரழிவு ஏற்பட்டது. இந்த இயற்கைச் சீற்றத்தில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் வெளிநாட்டினர் உட்பட 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலர் இன்னும் தேடப்பட்டு வந்தாலும், நீண்ட காலமாக உயிருடனோ அல்லது சடலமாகவோ கண்டறியப்படாதவர்களை இறந்தவர்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கும் செயல்முறையை நேப்பாள அரசு தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, 12 நாடுகளின் தூதரகங்கள் மூலம் 452 வெளிநாட்டினரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 213 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களைத் தொடர்ந்து 85 சீனர்கள், 69 அமெரிக்கர்கள், 32 பிரிட்டன் குடிமக்கள், 27 கனடியர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நேப்பாளத்தின் தேசியப் பேரிடர், மேலாண்மை ஆணையம், மாயமான 213 இந்தியக் குடிமக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகக் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆட்சேபனைகள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இந்தப் பட்டியலைக் கவனமாகப் பரிசீலித்து, ஏதேனும் ஆட்சேபனைகள், மாற்றங்கள் அல்லது கூடுதல் தகவல்கள் இருந்தால் டிசம்பர் 2ஆம் தேதிக்குள் தூதரகத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆட்சேபனைகள் பெறப்பட்ட பிறகு, நேப்பாள அரசு இறுதிப் பட்டியலைத் தயார் செய்து, காணாமல் போனவர்களை அதிகாரபூர்வமாக இறந்தவர்களாக அறிவிக்கும்.

மேலும், சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் மூலம் இறப்புச் சான்றிதழ்களைப் பெறும் நடைமுறையும் தொடங்கப்படும் என்றும் இதற்குக் குடும்பத்தினரிடமிருந்து கூடுதல் ஆவணங்களும் விவரங்களும் தேவைப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்