தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவு, தண்ணீர் இன்றித் தவிக்கும் மாவோயிஸ்ட்டுகள்; சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர்

2 mins read
25163913-065e-408a-b45b-2620d507e250
சரணடைவது மட்டுமே மாவோயிஸ்ட்டுகளுக்கு உள்ள ஒரே தீர்வு என்றும் இல்லையெனில் உயிரை இழக்க நேரிடும் என்றும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். - படம்: ஊடகம்

ராய்ப்பூர்: மாவோயிஸ்ட்டுகளை முற்றிலுமாக துடைத்தொழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அந்த இயக்கத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை என்ற பெயரில், மேற்கொள்ளப்படும் நடவடிக்கையால் மாவோயிஸ்ட்டுகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அடர்ந்து காடுகள், மலைகள் நிறைந்த பகுதிகளில் பதுங்கியுள்ள மாவோயிஸ்ட்டுகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.

சத்தீஸ்கர், தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மாவோயிஸ்ட் இயக்க நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இரு மாநில எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சரணடைவது மட்டுமே மாவோயிஸ்ட்டுகளுக்கு உள்ள ஒரே தீர்வு என்றும் இல்லையெனில் உயிரை இழக்க நேரிடும் என்றும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 300க்கும் அதிகமான மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும், அங்கு அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து, புதிய அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரேகட்டா, நட்பள்ளி, புஜாரி கன்கெர் வனப்பகுதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து முன்னேறி வருவதாகவும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள அணியை முறியடிப்பதில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு நாள்களாகப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, மூன்று பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தேடுதல் வேட்டையில் கரேகட்டா, நட்பள்ளி மற்றும் புஜாரி கன்கெர் வனப்பகுதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து முன்னேறி வருகின்றனர்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு உணவு, குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அவற்றை விநியோகிக்கும் பகுதிகளுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எந்த நேரத்திலும் மாவோயிஸ்ட்டுகள் பிடிபடுவார்கள் என சத்தீஸ்கர் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்