தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் ஒரே ஆண்டில் அதிக சொத்து சேர்த்தவர்களில் அதானி முதலிடம்

2 mins read
8b1b610f-e59b-4591-b2c2-8261ef0ef839
கௌதம் சாந்திலால் அதானி. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: இந்தியாவின் பணக்காரர் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி வெளியான அந்தப் பட்டியலின்படி 2024ஆம் ஆண்டில் 100 இந்தியப் பணக்காரர்களில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவற்றின் சொந்தக்காரரான அம்பானி நடப்பு ஆண்டில் 27.5 பில்லியன் டாலர் வரை கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார். எனவே அவரின் சொத்துமதிப்பு தற்போது 119.5 பில்லியன் டாலராக (11.9 லட்சம் கோடி ருபாய்) அதிகரித்துள்ளது. எனவே உலகப் பணக்காரர் பட்டியலில் அம்பானிக்கு 13வது இடம். அதற்கு அடுத்தபடியாக 116 பில்லியன் அமெரிக்க டாலர் (11.6 லட்சம் கோடி ரூபாய்) சொத்து மதிப்புடன் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மொத்த மதிப்பில் அம்பானிக்கு அடுத்தபடியாக இருந்தாலும், கடந்த ஒரே ஆண்டில் அதிக சொத்து சேர்த்ததில் அம்பானியை, அதானி பின்னுக்குத் தள்ளியுள்ளார். அதாவது, அதானி கடந்த ஒரே ஆண்டில் 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து சேர்ந்துள்ளார்.

இது அம்பானி கடந்த ஒரே ஆண்டில் சேர்த்த சொத்தை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். எனவே பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை நோக்கி அதானி முன்னேறி வருகிறார் என்றே இதன்மூலம் புலனாகிறது. தொடர்ந்து பணக்காரர் பட்டியலில் 3.7 பில்லியன் டாலர் மதிப்புடன் சாவித்திரி ஜிண்டால் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் ஷிவ் நாடாரும் உள்ளனர்.

இதுதவிர்த்து இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய பணக்காரர்களின் சொத்துமதிப்பு இந்த வருடம் மட்டும் மொத்தமாக 40 விழுக்காடு உயர்ந்து 1 டிரில்லியன் டாலர் என்ற அளவைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 799 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்தது.

குறிப்புச் சொற்கள்