பல்வேறு அம்சங்களைப் பிரதிபலிக்கும் ஒப்பந்தம்: மோடி பெருமிதம்

பல்வேறு அம்சங்களைப் பிரதிபலிக்கும் ஒப்பந்தம்: மோடி பெருமிதம்

2 mins read
f09b3d34-27ff-40ae-a551-117b14be201f
இந்தியாவும் நியூசிலாந்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.  - படம்: நியூஸ் ஆன் ஏர்

புதுடெல்லி: இந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு துடிப்பான ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான பல்வேறு முக்கியமான அம்சங்களைப் பிரதிபலிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் மக்களுக்கும் குறிப்பாக, இருதரப்பு பொருளியல்களின் உயிர்நாடியாக விளங்கும் இளையர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

வலுப்பெற்று வரும் இருதரப்புப் பொருளியல் பங்காளித்துவம், நம்பிக்கை, பகிரப்பட்ட லட்சியங்கள் ஆகியவற்றை புதிய ஒப்பந்தம் பிரதிபலிப்பதாக திரு மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவும் நியூசிலாந்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டன.

இதுதொடர்பாக புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வுக்கு இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நியூசிலாந்தின் வர்த்தக, முதலீட்டு அமைச்சர் டாட் மெக்ளே ஆகியோர் தலைமை தாங்கினர்.

இருதரப்புக்கும் இடையேயான இந்த ஒப்பந்தம், சாதனை அளவாக ஒன்பது மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அனைத்து இந்திய ஏற்றுமதிகளுக்கும் 100 விழுக்காடு வரிவிலக்கு அளிப்பதை உறுதி செய்கிறது என்றும் நியூசிலாந்தின் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு உறுதிப்பாட்டை எளிதாக்குகிறது என்றும் ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்த வேகம், இரு தரப்பினருக்கும் இடையிலான ஆழமான நம்பிக்கையையும் பகிரப்பட்ட லட்சியத்தையும் எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியூசிலாந்து அமைச்சர் திரு மெக்ளே பேசுகையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது, நியூசிலாந்து ஏற்றுமதியாளர்களுக்கு இந்தியாவில் இதுவரை கிடைக்காத வாய்ப்புகளை வழங்குவதாகச் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடியும் நியூசிலாந்து பிரதமர் சகா கிறிஸ்டோபர் லக்ஸனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை இரு நாடுகளுக்கும் இடையிலான பங்காளித்துவ நடவடிக்கைகளில் முக்கியமானதொரு மைல்கல் தருணம் என்று விவரித்தனர்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் வளர்ச்சி, பங்காளித்துவத்துக்கு முன் எப்போதும் இல்லாத உத்வேகத்தை அளிக்கும் என்றும் விவசாயிகள், இளையர்கள், பெண்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், கைவினைக் கலைஞர்கள், புதுத்தொழில் நிறுவனங்கள், மாணவர்கள், புதுமையாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்றும் பிரதமர் மோடி, தமது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களுடைய ‘மேக் இன் இந்தியா’ முதன்மைத் திட்டத்தின்கீழ் நியூசிலாந்து மேற்கொள்ளும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு உறுதிப்பாட்டிற்கு ஒருங்கிணைப்பை வழங்கும் வகையில் தடையற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

“வர்த்தகத்தையும் கடந்த ஒரு துடிப்பான பங்காளித்துவத்தை அளிக்கிறது. இது புதுத்தொழில் சூழலமைப்பு, தொழில்முனைவோர், புதுமைப் படைப்பாளர்கள், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் ஆகியவற்றை ஆதரித்து, வேலைவாய்ப்பை உருவாக்கும். புதுமையால் உந்தப்பட்ட வளர்ச்சியை மறுவரையறை செய்யும்,” என்றும் பிரதமர் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

“கடந்த பத்தாண்டுகளாக, உற்பத்தித் துறையில் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒரு முக்கிய அங்கமாக மாறுவதற்கு இந்தியா பணியாற்றி வருகிறது,” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்