புதுடெல்லி: ரஷ்யாவுடனான ஒப்பந்தப்படி, ‘எஸ்-400’ நீண்டதூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளில் ஐந்தாவது தொகுதி வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்துக்குள் இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2018ல் இந்திய அரசு, ரஷ்யாவுடன் 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஐந்து ‘எஸ்-400’ அமைப்புகளைப் பெற ஒப்பந்தம் செய்தது. அதில் நான்காவது தொகுதி இந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.
தற்போது செயல்பாட்டில் உள்ள நான்கு அமைப்புகளில், மூன்று அமைப்புகள் நாட்டின் மேற்கு எல்லையிலும் ஒன்று கிழக்கு எல்லைப் பகுதியிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வரும் டிசம்பரில் இந்திய உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ரஷ்யாவுக்குச் சென்று ஐந்தாவது தொகுதிக்கான அமைப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்யும். ஜனவரி முதல் பாகங்கள் பிரிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ரஷ்யாவின் ‘எஸ்-400 ட்ரையம்ஃப்’ (S-400 Triumf) ஏவுகணைத் தளங்கள் ஏறக்குறைய 400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று எதிரி நாடுகளின் விமானங்கள், ஆளில்லா வானூர்திகள் (டிரோன்கள்), ஏவுகணைகள், உளவுப் போர்க்களக் கண்காணிப்புச் சாதனங்களைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
இந்த அமைப்புகளுக்குப் பாதுகாப்பாகச் செயல்படக்கூடிய ரஷ்யாவின் குறுகியதூர வான் பாதுகாப்பு அமைப்பான மொத்தம் 52 ‘பான்ட்சீர்’ (Pantsir) அமைப்புகளில் 13 அமைப்புகளை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏனைய 39 அமைப்புகள் ‘இந்தியாவிலேயே தயாரிப்பது’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.
ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட ஐந்து கூடுதல் ‘எஸ்-400’ தொகுதிகளுக்கான ஒப்பந்தங்களும் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவின் வான் பாதுகாப்பு அரண் மேலும் வலுவடையும்.
