இந்திய-சீனா எல்லையில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இந்திய-சீனா எல்லையில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு

2 mins read
b9321432-3612-491d-b7e1-f29c69493723
எல்லை நிர்ணயம், எல்லை மேலாண்மைக்கான நிபுணர் குழு, எல்லை மேலாண்மைக் குழு ஆகியவை தங்களின் எல்லை வரையறைகளை உடனடியாக இறுதிசெய்ய உடன்பாடு எட்டப்பட்டது. - கோப்புப் படம்: சிஎன்பிசி
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய-சீனா எல்லைப் பகுதிகளில் அமைதியையும் அதற்கான சூழலைப் பராமரிக்கவும், இருதரப்பு உறவுகளின் ஆரோக்கியமான, சீரான வளர்ச்சிக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கவும் இருதரப்பும் தங்கள் உறுதியை வெளிப்படுத்தியுள்ளன.

எல்லைப் பிரச்சினை தொடர்பான இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்திலான 25வது சுற்றுப்பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், எல்லைப் பிரச்சினை குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, எட்டு முக்கியமான அம்சங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டில் கையெழுத்தான அரசியல் அளவுருக்கள், வழிகாட்டுதல் கோட்பாடுகளின் அடிப்படையில் நியாயமான, இருதரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை நோக்கி எல்லைப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.

எல்லை நிர்ணயம், எல்லை மேலாண்மைக்கான நிபுணர் குழு, எல்லை மேலாண்மைக் குழு ஆகியவை தங்களின் எல்லை வரையறைகளை உடனடியாக இறுதிசெய்ய உடன்பாடு எட்டப்பட்டது.

எல்லைக் கோட்டுப் பகுதியில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளை உடனடியாகத் தீர்க்கவும் தவறான புரிதல்களைத் தவிர்க்கவும் தூதரக, ராணுவ ரீதியிலான உயர்நிலைக் கூட்டங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு, மத்திய எல்லைப் பகுதிகளில் மேலும் இரண்டு புதிய ராணுவ ஹாட்லைன் இணைப்புகளை உருவாக்கவும் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தைகளுக்குக் கூடுதல் சந்திப்பு மையங்களை அமைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும், மூன்று எல்லை வர்த்தக மையங்களை மீண்டும் திறப்பதன் மூலம் எல்லைப்புற வர்த்தகம், மக்கள் இடையேயான தொடர்பை வலுப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

நதிநீர் தரவுப் பகிர்வு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் புதுப்பித்தல் தொடர்பான இந்தியா-சீனா நிபுணர் அளவிலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 26வது சுற்று சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சீனாஎல்லைபேச்சுவார்த்தைஅமைதிஉடன்பாடுமேலாண்மைபுரிந்துணர்வுஒப்பந்தம்