புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் (ஏஐ) பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை ஆயிரக்கணக்கானோர் எடுத்துக்கொண்டது கின்னஸ் சாதனையாகப் பதிவாகியுள்ளது.
24 மணி நேரத்தில் ஏறக்குறைய 2.4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பிப்ரவரி 16, 17ஆம் தேதிகளில் மட்டும் 250,946 பேர் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர் என்றார் அவர்.
டெல்லியில் நடைபெறும் ‘ஏஐ’ உச்சநிலை மாநாட்டையொட்டி இண்டெல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து பிப்ரவரி 16ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் ‘ஏஐ’ பொறுப்பு உறுதிமொழி இயக்கத்தைத் தொடங்கியது இந்திய அரசு.
இதற்கான சிறப்பு இணையத்தளம் மூலம் செயற்கை நுண்ணறிவை நெறிமுறையுடனும் பொறுப்புடனும் பயன்படுத்துவது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
மனித வாழ்க்கையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
‘ஏஐ’யைப் பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும் இந்த உறுதிமொழியை எடுக்க மாணவர்களை ஊக்குவிக்கவும் இந்தியப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை தூண்டுதலாக அமைந்தது என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
“இது உண்மையிலேயே நாட்டிற்கான பெருமையான தருணம். செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புடன் ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தை நோக்கி இந்தியா நடைபோட வேண்டிய திசை இதுதான்,” என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் குறிப்பிட்டார்.

