பயங்கரவாத மூளைச்சலவையைத் தடுக்க ‘ஏஐ’ கண்காணிப்பு மையம்

பயங்கரவாத மூளைச்சலவையைத் தடுக்க ‘ஏஐ’ கண்காணிப்பு மையம்

கோப்புப் படம்: தி ஃபெடரெல்

17 Nov 2026 - 4:26 pm

2 mins read

புதுடெல்லி: இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதப் பாதைக்குத் திருப்பும் சதிகளை முறியடிக்க, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கண்காணிப்பு மையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சின்கீழ் இயங்கும் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சார்பில், வரும் 19, 20 ஆகிய தேதிகளில் டெல்லியில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது. அதில், உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, எல்லைப்புறப் பாதுகாப்பு, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத கும்பல்கள், போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஐந்து ஆண்டுகால தேசிய பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்தின்கீழ் வலுவான பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, இணையத்தளங்கள், ரகசிய செயலிகள், சமூக ஊடகங்களில் பரவும் பயங்கரவாதக் கருத்துகளைக் கண்காணிக்க ‘தேசிய பயங்கரவாத கண்காணிப்பு பகுப்பாய்வு மையம்’ உருவாக்கப்பட உள்ளது.

நவீன ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் இம்மையம், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள், மூளைச்சலவை முயற்சிகளை நிகழ்நேரத்தில் துல்லியமாகக் கண்டறியும்.

மேலும், மத்திய உளவு அமைப்புகள், கண்காணிப்பு மையம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட உள்ளன.

அடிமட்ட அளவில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் சிறப்பு மாவட்டக் குழுக்களும் அமைக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் மூலம் தவறான பாதைக்குச் செல்லும் இளைஞர்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கி நல்வழிப்படுத்தவும் இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்