பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ள மகரவிளக்கு வழிபாட்டின்போது கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தச் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (ஜூன் 20) வல்லுநர் குழுவுடன் இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை, டெல்லி, மும்பையைச் சேர்ந்த மூன்று ஏஐ நிறுவனங்கள் தங்களின் திட்டங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளன.
அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சபரிமலைக்கு உகந்த சிறப்பு ஏஐ கேமராக்கள், ஆளில்லா வானூர்திகள், ஜிஐஎஸ் வரைபடங்கள் மூலம் கூட்டத்தினரின் எண்ணிக்கை முன்கூட்டியே கணிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பப்படும்.
இதன் மூலம், காணாமல் போனவர்களை எளிதில் கண்டறியவும், 26 வாகன நிறுத்துமிடங்களை மனிதத் தலையீடின்றி நிர்வகிக்கவும் முடியும்.
கடந்த ஆண்டு மகரவிளக்கு வழிபாட்டுக் காலத்தின்போது ஏறக்குறைய 510,000 பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றனர்.
கும்பமேளா போன்ற பெரிய விழாக்களில் இந்தத் தொழில்நுட்பம் ஏற்கெனவே வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஏஐ முறை மூலம் காவல்துறையினரின் பணிச்சுமை குறைவதோடு, பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்காமல் பாதுகாப்பான தரிசனம் பெற முடியும் என்று பத்தனம்திட்டா எஸ்பி ஆர்.ஆனந்த் தெரிவித்தார். தற்போது நடைமுறையிலுள்ள இணையப் பதிவு முறையுடன் இணைந்து இந்த ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

