சென்னை: ரத்தப் பரிசோதனையின்றி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் நீரிழிவு நோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை இந்திய, அமெரிக்க மருத்துவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
விழித்திரையைப் படம் எடுத்து சர்க்கரை நோயைக் கண்டறியும் முறை குறித்த ஆய்வை மெட்ராஸ் நீரிழிவு ஆய்வு மையம், மங்களூர் ஏனபோயா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொண்டுள்ளன.
இது நீரிழிவினால் கண்ணின் ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிகிறது. இச்சோதனை முறை விரைவானது, துல்லியமானது. இதனால், விரல்களைக் குத்தி ரத்தம் எடுப்பது குறையும்.
ஆய்வின் முடிவு அனைத்துலக ஆய்விதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
விழித்திரைப் புகைப்படங்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தொடக்க நிலையிலேயே நோயைக் கண்டறியலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் டாக்டா் வி.மோகன் கூறியுள்ளார்.
ரத்தப் பரிசோதனை செய்யாமல் கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையை மிகத் துல்லியமாகப் படம் எடுப்பதன் மூலம் அது சாத்தியமாகிறது. அந்தப் படங்களைப் பயன்படுத்தி, ரத்த நாளங்களில் ஏற்படும் குறிப்பிட்ட மாற்றங்களை ஏஐ மூலம் கண்டறியலாம் என்று அவர் விளக்கினார்.
இந்தத் தொழில்நுட்பம் குறிப்பாக இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, அங்கு நோயறிதல் ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நீரிழிவுப் பிரச்சினை உள்ளது. பரிசோதனை மேற்கொள்ளாததால் பெரும்பாலும் பலருக்கு நோய் இருப்பது தெரியாது,” என்று அவர் கூறினார்.
“ஒரு படத்தைப் பார்ப்பதன் மூலம் நீரிழிவை 95% துல்லியமாக அடையாளம் காணலாம்,” என்று எமோரி பல்கலைக்கழக மருத்துவர் சுதேஷ்னா சில் கர் கூறினார்.

