புதுடெல்லி: தொழில்நுட்பமும் புதிய வழிகளும் அரசு நிர்வாகம் துரித வேகத்தில் செயல்பட உதவும் என இந்திய அதிபர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டின் மூலம் அரசு நிர்வாக அமைப்புகளை எளிமைப்படுத்த இயலும் என்றும் புதிதாக தோ்வான ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப்பணி) அதிகாரிகள் குழுவினருடன் அதிபர் மாளிகையில் திங்கட்கிழமை (மார்ச் 2) உரையாடியபோது அவர் குறிப்பிட்டார்.
மிகவும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களை அரசு நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்றும் அப்போதுதான் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான பயன் கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புவியியல், சமூக அல்லது பொருளியல் காரணங்களால் எந்தச் சமூகத்தினரும் பின்தங்கிவிடக் கூடாது என்றும் அதிபர் முர்மு கேட்டுக்கொண்டார்.
இதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நலனுக்கு அப்பாற்பட்டு மாநில முன்னுரிமைகளையும் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின்னிலக்க குறைதீா்ப்பு முறைகளுக்கு அனைவரும் மாற வேண்டும் என்று வலியுறுத்திய அதிபர், அவை அரசு நிர்வாக அமைப்புகளை எளிமைப்படுத்தும் என்றார்.
“நவீன தொழில்நுட்பங்களுக்கு மாறுகையில், அவை மனித உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் சரியான தீர்வுகளைத் தருவதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
“ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் பசுமைக்கும் பருவநிலைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் நீடித்த நிலையான வளா்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்,” என்றார் அதிபர் முர்மு.

