தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுக-பாஜக கூட்டணி வலுவாக உள்ளது: மத்திய அமைச்சர் எல். முருகன்

2 mins read
7fdd61f6-f66b-48a2-a210-3cfbcdaefac3
எதிர்க்கட்சிகள் வீண் புரளிகளை கிளப்புகிறார்கள் என்கிறார் எல். முருகன். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

நாமக்கல்: எதிர்க்கட்சிகள் வீண் புரளிகளைக் கிளப்புவதாகவும் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக இருப்பதாகவும் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

நாமக்கல்லில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“பாஜக - அதிமுக கூட்டணி வலிமையாகவே உள்ளது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

“ஆட்சியில் பங்கு குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும். கடந்த காலங்களில் தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக, அதிமுக முதல்வர்கள் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான போக்கில் செயல்பட்டு வந்தனர். தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களைப் பெற்றனர்.

“மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இரட்டை இன்ஜின் சர்க்கார் அமைத்து சிறப்பாக மாநிலங்களை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்கிறது.

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியைத் தவறாக வழி நடத்துவதால் மத்திய அரசுடன் இணக்கம் இல்லாமல் மோதல் போக்கை மட்டுமே செய்கிறார்.

“தமிழக வளர்ச்சிக்காக அவர் எதையும் செய்யவில்லை. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை சட்டரீதியாக சந்திப்பேன்,” என்று எல். முருகன் தெரிவித்தார்.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகமாடுவதாகவும் அவர் கூறினார்.

“நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது. வேறு ஒன்றையும் இதுவரை செய்ததில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி, மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதை சட்டமாக்க உதவியது திமுக அமைச்சர்கள். நீட் தேர்வுக்காக படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் திமுக விளையாடி வருகிறது,” என்று அமைச்சர் முருகன் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்