கண்ணூர்: ஓமான் தலைநகர் மஸ்கட்டில் இருந்து இந்தியாவின் கேரள மாநிலம், கண்ணூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு சுமார் ஒரு கிலோ தங்கத்தை மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தியதாகக் கூறப்படும் விமானச் சிப்பந்தி ஒருவர் வியாழக்கிழமை (மே 30) கைது செய்யப்பட்டார்.
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், செவ்வாய்க்கிழமை (மே 28) கண்ணூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய கோல்கத்தாவைச் சேர்ந்த சுரபி காதுன், 26, என்ற விமானச் சிப்பந்தியை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்ததாகத் தெரிவித்தது.
அச்சிப்பந்தியின் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கலவை வடிவிலான 960 கிராம் தங்கம் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பின்னர் 14 நாள்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மலக்குடலில் தங்கத்தை மறைத்து கடத்தியதற்காக விமானச் சிப்பந்தி ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை என வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறியதை பிடிஐ செய்தி நிறுவனம் மேற்கோள்காட்டியது.
அந்தச் சிப்பந்தி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்துக்காக பணிபுரிந்து வந்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே போன்ற இந்திய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
சுரபி காதுன், இதற்கு முன்பு பலமுறை தங்கம் கடத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடத்தல் கும்பலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த நபர்களின் தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.