அகமதாபாத்: கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 260 பேர் கொல்லப்பட்டனர்.
அவ்விமானம் நிலத்திலிருந்து புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு எரிபொருளை எஞ்சின் இயந்திரத்துக்குள் செலுத்தும் செயல்பாடுகளை இயக்கும் முறை (fuel cutoff switches) தொடர்பில் குழப்பம் ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் எஞ்சின் இயந்திரங்களுக்கு எரிபொருள் சரியாகப் போகவில்லை. அதன் காரணமாக விமானிகள் இருக்கும் விமானப் பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
அகமதாபாத்திலிருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் போகவிருந்த அந்த போயிங் 787 டிரீம்லைனர் விமானம் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி விழுந்து நொறுங்கியது. அச்சம்பவம், உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் காணப்படாத ஆக மோசமான விமான விபத்தாகும்.
விமான விபத்துகள் குறித்து விசாரணை நடத்தும் இந்திய அதிகாரிகள் அவ்விபத்து குறித்த அறிக்கையை சனிக்கிழமை (ஜூலை 12) வெளியிட்டனர். இந்தியாவின் விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) வெளியிட்ட அந்த அறிக்கை, எரிபொருளை எஞ்சின் இயந்திரத்துக்குள் செலுத்தும் செயல்பாடுகளை இயக்கும் முறை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு எரிபொருள் எஞ்சினுக்குப் போவதை நிறுத்தியதற்கான காரணம் என்ன என்று ஒரு விமானி மற்றொருவரைக் கேட்டது பதிவாகியிருக்கிறது. தான் அவ்வாறு செய்யவில்லை என்று மற்றொரு விமானி பதிலளித்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவுக்கு மீண்டும் நற்பெயரைக் கொண்டுவந்து அதற்குப் புதிய விமானங்களைத் தருவிக்க டாடா குழுமம் எண்ணம் கொண்டுள்ளது. அக்குழுமம், 2022ஆம் ஆண்டு ஏர் இந்தியாவை இந்திய அரசாங்கத்திடமிருந்து வாங்கியது.
அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்து, இலக்குகளை அடைய டாடா குழுமத்துக்கு சவாலாக அமைந்துள்ளது.
விசாரணை அறிக்கையைத் தாங்கள் ஏற்றுக்கொண்டதாக ஏர் இந்தியா தெரிவித்தது. இந்திய அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாகத் தெரிவித்த ஏர் இந்தியா, வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சுமீத் சபர்வால், 56, கிளைவ் குண்டெர், 32, ஆகியோர் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானத்தின் விமானிகள். தலைமை விமானியான கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு மொத்தம் 15,638 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் இருந்தது. கிளைவ் குண்டெர், மொத்தம் 3,403 மணிநேரத்துக்கு விமானம் ஓட்டியவர்.